

சேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்படவுள்ளது.
'திருமணம்' படத்துக்குப் பிறகு, இயக்குநர் சேரன் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். ஆனால், அந்தக் கதையை பல முன்னணி நடிகர்களிடம் கூற நேரம் கேட்டும் யாரும் தரவில்லை என்று கடுமையாகச் சாடினார்.
இதனிடையே சேரனுக்கு இருந்த பணப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், விஜய் சேதுபதி நடிப்பதற்குத் தானாகத் தேதிகள் வழங்கினார். இதனால், பல மேடைகளில் விஜய் சேதுபதி குறித்து மிகவும் பெருமையாகப் பேசினார் சேரன்.
இந்நிலையில், திடீரென்று பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராகச் சென்றார் சேரன். அங்கும் இந்த நிகழ்ச்சிக்கு தன்னை விஜய் சேதுபதி தான் போகச் சொன்னதாகத் தெரிவித்தார். இதனிடையே, எப்போது விஜய் சேதுபதி நடிக்கும் படத்தைத் தொடங்குவார் என்பது தெரியாமலேயே இருந்தது.
தற்போது 2020-ம் ஆண்டு ஜனவரியில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக பிக் பாஸ் வீட்டுக்குள் தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன். செப்டம்பர் 1-ம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இது தொடர்பாகப் பேசியுள்ளார்.
அப்படியென்றால், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவுடனே விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்துக்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தினை யார் தயாரிக்கவுள்ளார், யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற விவரங்கள் எதையுமே சேரன் இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.