

அஜித்துக்கு வில்லனாக அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்தது.
'நேர்கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு மீண்டும் அஜித் நடிக்கும் படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். போனி கபூரே தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது அஜித்துடன் நடிக்கவுள்ளவர்களைத் தேர்வு செய்வது மற்றும் திரைக்கதையை இறுதி செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியது.
இந்தச் செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், படக்குழுவினரிடம் இது குறித்துக் கேட்டபோது, "இன்னும் எதுவுமே முடிவாகவில்லை. அதற்குள் எப்படி இப்படியொரு செய்தி கிளம்பியது என்று தெரியவில்லை. போனி கபூர் சார் தயாரிக்கும் 'மைதான்' இந்திப் படத்தில் அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கவுள்ளார். அந்தப் படத்தையும் அஜித் சார் படத்தையும் வைத்துக் கொண்டு, வில்லனாக அஜய் தேவ்கன் என்று செய்திகள் பரபரப்புகிறார்கள்.
இந்தச் செய்தியில் உண்மையில்லை. இப்போதைக்கு அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி மட்டுமே உறுதியாகியுள்ளது. வேறு எதுவுமே முடிவாகவில்லை. அனைத்தும் முடிவானவுடன் முறையாக அறிவிப்போம்" என்று தெரிவித்தனர்.