

கமலுடன் ஒப்பிட்டு சூர்யாவைப் பேசியது ரசிகர்களிடையே சர்ச்சையானதால் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் 'ஒத்த செருப்பு'. செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை பல்வேறு வகைகளில் பார்த்திபன் விளம்பரப்படுத்தி வருகிறார். பல்வேறு திரையுலகப் பிரபலங்களுக்கு படத்தைத் திரையிட்டுக் காட்டியுள்ளார், அவர்கள் கூறும் கருத்துகளை அவ்வப் போது தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.
இதனிடையே 'ஒத்த செருப்பு' படம் தொடர்பாக பார்த்திபன் அளித்த பேட்டியொன்றில் "அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகுறதுக்கு நிறைய போட்டி இருக்கு. ஆனா அடுத்த கமல் ஆகுறதுக்கு இங்கே போட்டி இல்லை. அதுக்கு நிறைய திறமை வேணும். அந்தப் போட்டியில ரொம்ப முக்கியமான இடத்துல இருக்குறவர் சூர்யா" என்று தெரிவித்தார்.
இது சூர்யா ரசிகர்களை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, "பொய் பேச மாட்டேன்... இந்த விஷயத்திலேயும்/ஜென்மத்திலேயும்!" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் பார்த்திபன்.
உடனடியாக விக்ரம் ரசிகர் ஒருவர் "அப்போ நடிகர் விக்ரம் இந்தப் போட்டிக்குத் தகுதி இல்லாதவரா? மதிப்பிற்குரிய பார்த்திபன் சார்" எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பார்த்திபன் "என் மரியாதைக்குரியவர், ஒப்புமையில்லா ஒப்பற்ற கலைஞர்!" என்று தெரிவித்துள்ளார்.
கமலுடன் ஒப்பிட்டு சூர்யாவை மட்டும் குறிப்பிட்டது, விக்ரம் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கியிருப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பாக பலரும் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பார்த்திபன் "நான், எல்லா நடிகர்களின் நண்பனும் ரசிகனும்! உரிய மரியாதையை உயரிய மொழியில் கவிதையாய் பொழிவேன். கமல் சார், ரஜினி சார் இருவரும் என்னை அன்போடே நடத்துவர். இசைஞானியும் இசைப்புயலும் கூட அப்படியே. என் பதிவுகள் உங்களுக்குள் பிரச்சினையை உண்டாக்குவதானால்-எந்த நடிகரைப் பற்றியும் துளிப்பதிவும் இடுவதில்லை" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.