

ஹாட் ஸ்டார் தளத்துக்காக வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸில் வைபவ்வும், காஜல் அகர்வாலும் நடிப்பது உறுதியாகியுள்ளது.
'சரோஜா' படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் வைபவ். இவரும் இயகுநர் வெங்கட் பிரபுவும் நெருங்கிய நண்பர்கள். 'சென்னை 28' படத்தில், ஜெய் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது வைபவ் தான். ஆனால் அப்போது அவர் வேறொரு தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், 'சென்னை 28'ல் நடிக்கமுடியவில்லை. அதற்கு பதிலாக தனது அடுத்த படமான 'சரோஜா'வில் வைபவ்வை நடிக்க வைத்தார் வெங்கட் பிரபு.
'கோவா', 'மங்காத்தா', 'சென்னை 28' இரண்டாம் பாகம் உள்ளிட்ட வெங்கட் பிரபு படங்களில் வைபவ் நடித்துள்ளார். மேலும், வெங்கட் பிரபு தயாரித்துள்ள 'ஆர்கே நகர்' படத்தின் நாயகனும் வைபவ் தான். தற்போது, வெப் சீரிஸ் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் வெங்கட் பிரபு. இதிலும் வைபவ் நடிக்கிறார்.
இது குறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசிய வைபவ் இந்த வெப் சீரிஸில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
"ஆம் நடிக்கிறேன். இப்போதைக்கு தேதிகள் ஒதுக்குவதில் சில சிக்கல்கள் உள்ளன. அது சரி செய்யப்பட்டுவிடும். ஹாட் ஸ்டாருக்காக இதை எடுக்கிறோம். காஜல் அகர்வாலும் இதில் நடிக்கிறார்" என்று வைபவ் கூறியுள்ளார்.
'சரோஜா' படத்தில் காஜல் அகர்வாலைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் வைபவ் நடித்திருப்பது நினைவுகூரத்தக்கது.