

உச்சத்தில் இருக்கும் நடிகைகள் பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள் என நடிகர் வைபவ் கூறியுள்ளார்.
'சரோஜா' படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் வைபவ். பிரபல தெலுங்கு இயக்குநர் கோதண்டராமி ரெட்டியின் மகன் இவர். வைபவ்வின் சகோதரர் சுனிலும் ஒரு நடிகர். 'சீதக்காதி' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
வைபவ் நடிப்பில் 'சிக்சர்' படம் கடந்த வாரம் வெளியானது. வைபவ் தனி நாயகனாக நடித்து பல படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அதிகம் பேசப்பட்ட, பாராட்டப்பட்ட 'மேயாத மான்' திரைப்படமும் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெற்றுத் தரவில்லை.
இது குறித்துப் பேசியிருக்கும் வைபவ், "மேயாத மான் சிலருக்கு உதவியது. படத்தின் நாயகி பிரியா பவானி சங்கர் தற்போது 'இந்தியன் 2'-வில் நடித்து வருகிறார். ஒவ்வொரு நாயகனும் சந்திக்கும் போராட்டங்களைக் தான் நானும் சந்திப்பதாக நினைக்கிறேன்.
சில நேரங்களில் நம் படம் ஓடாது. சில இயக்குநர்கள் நம்மை வைத்துப் படம் எடுக்க மாட்டார்கள். என் படத்திலிருந்து நாயகிகள் கூட பின்வாங்கியிருக்கின்றனர். ஆனால் அவர்களைக் குற்றம் கூற முடியாது. உச்ச நாயகிகள் அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்த தளத்தில் இருக்கும் பெரிய நட்சத்திரங்களின் படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறார்கள். அவர்கள் நினைப்பதில் தவறில்லை. என் சூழ்நிலை இப்போது இப்படி இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.