

செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகவிருந்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் வெளியீடு ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
ஆனால், திட்டமிட்டபடி செப்டம்பர் 6-ம் தேதி இந்தப் படம் வெளியாகவில்லை. சில நாட்களாக வெளியாகும் விளம்பரங்களில் 'அதி விரைவில்' என்றே விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இந்தப் படத்துக்காக வைக்கப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு கூட தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரித்த போது, இதற்குக் காரணம் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் தான் என்கிறார்கள். அந்தப் படத்தை வெளிக் கொண்டுவரத் தயாரிப்பாளர் சங்கம், பைனான்ஸியர்கள் என பலரும் உட்கார்ந்து பேசி செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. அதிலும் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கவுள்ளது.
இந்தப் படத்தை வெளிக் கொண்டுவருவதற்காகப் பேசியவர்கள் பலருமே, அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு தொலைபேசி வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். என்னவென்றால், நீண்ட நாட்களுக்குப் பிறகு 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் வெளியாகிறது. அதிலிருக்கும் பிரச்சினையிலிருந்து கவுதம் மேனன் வெளியே வர வேண்டும். ஆகையால் அந்தப் படம் தனியே வந்தது என்றால், கொஞ்சம் தப்பித்துக் கொள்வார் என்று கூறியுள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தங்களது படத்தை செப்டம்பர் 12-ம் தேதி வெளிக் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
ஒரு வேளை திட்டமிட்டபடி 'எனை நோக்கி பாயும் தோட்டா' வெளியாகவில்லை என்றால், செப்டம்பர் 6-ம் தேதியே வந்துவிடலாம் என்றும் திட்டமிட்டுள்ளது. இதற்காகவே தங்களுடைய விளம்பரங்களில் இன்னும் வெளியீட்டுத் தேதியை 'சிவப்பு மஞ்சள் பச்சை’இறுதி செய்யாமல் இருக்கிறது.