

குஷ்பு வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டதற்கு கஸ்தூரி பாராட்டு தெரிவித்துள்ளார். அதற்கு குஷ்பு அளித்த பதிலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவரான குஷ்பு, இயக்குநர் சுந்தர்.சியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள். எப்போதுமே தான் ஒரு முஸ்லிம் என்று குஷ்பு காட்டிக்கொண்டதே இல்லை. பாஜகவைச் சேர்ந்தவர்கள் யாரேனும் கடுமையாகக் கிண்டல் செய்யும் போது மட்டுமே, தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நிஜப்பெயரை குஷ்பு வெளிப்படுத்துவார்.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 2) விநாயகர் சதுர்த்தி கொண்டாடிவிட்டு, அதன் புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் குஷ்பு. இதனைப் பாராட்டும் வகையில் கஸ்தூரி, குஷ்புவின் ட்வீட்டை மேற்கோளிட்டு “இந்தியாவை நினைத்துப் பெருமை கொள்கிறேன். மும்பையில் பிறந்த ஒரு முஸ்லிம் பெண் தமிழகத்தின் அடையாளமாகியிருக்கிறார். ஒரு இந்து குடும்பத்தில் மருமகளாகி இரண்டு மத நம்பிக்கைக்கும் உண்மையாய் இருக்கிறார். அன்புதான் மிகப்பெரிய கடவுள். சகிப்புத்தன்மையே மிகப்பெரிய மதம். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்” என்று தெரிவித்தார்.
கஸ்தூரியின் பாராட்டை ஏற்ற குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "மிக்க நன்றி. ஆனால் ஒரு சிறிய திருத்தம். மும்பையில் பிறந்த ஒரு இந்தியப் பெண் தமிழகத்தின் அடையாளமாகியிருக்கிறார். இந்த மாநிலத்தில் வசிக்கும் ஒரு சக இந்தியரை மணந்து மதச்சார்பின்மை, மனிதநேயம் மற்றும் பன்முகத்தன்மையை நிலைநாட்டியிருக்கிறார். இது என்னுடைய இந்தியா. உண்மையான அன்புக்கு இடையில் சாதியோ மதமோ வரமுடியாது. அன்புதான் உண்மையான கடவுள்" என்று தெரிவித்துள்ளார்.
குஷ்புவின் இந்த பதில் சமூக வலைதளப் பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.