

கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதர்வா நடித்த 'பூமராங்' படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார் இயக்குநர் கண்ணன். ஆனால், அவரது கால்ஷீட் தேதிகள் தாமதமானதால் மீண்டும் அதர்வா நடிக்கும் படத்தையே இயக்கி வருகிறார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது, அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடித்து வருகிறார். தற்போது ரஷ்யாவில் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
இதனிடையே சந்தானம் படத்தின் பணிகளையும் தொடங்கியுள்ளார் கண்ணன். இதனையும் தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார். அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் சுமார் 45 நாட்கள் முதற்கட்டப் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.
இந்தப் படத்துக்காகச் சிலம்பம் கற்று வருகிறார் சந்தானம். அவருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 1-ம் தேதி படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர்.
அதர்வா நடித்து வரும் படம் டிசம்பர் மாதத்திலும், சந்தானம் நடிக்கவுள்ள படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியிலும் வெளியாகும் என இயக்குநர் கண்ணன் அறிவித்துள்ளார்.