

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் வில்லனாக ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'அசுரன்' படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு லண்டன் சென்றுள்ளார் தனுஷ். அங்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒய். நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்தியாவில் உள்ள இளம் வயது கேங்ஸ்டருக்கும், வெளிநாட்டில் உள்ள பெரிய கேங்ஸ்டருக்கும் இடையே நடப்பது தான் கதை.
ஆகையால் இதில் நடிக்கவுள்ள ஹாலிவுட் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தற்போது இதில் நடிக்க ஜேம்ஸ் காஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதைப் படக்குழு உறுதி செய்துள்ளது. இவர் 'Brave Heart', 'Troy' மற்றும் பிரபலமான இணையத் தொடரான 'Games of Thrones' ஆகியவற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க லண்டனிலேயே நடிக்கவுள்ளது. அதுவும் கொஞ்சம் கூட இடைவெளியின்றி ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டுத் திரும்பலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு, 'பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ். இந்தப் படத்தையும் தாணுவே தயாரிக்கவுள்ளார்.