

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 2 படங்கள், அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. யுவன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் கூட்டணி இணைந்து இசையமைத்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, நீண்ட நாட்களாக இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது இந்தப் படத்தின் தமிழக உரிமையை வான்சன் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அக்டோபர் மாதம் படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளது படக்குழு. இதனால், விளம்பரப்படுத்தும் பணிகளை விரைவில் துவங்கவுள்ளது.
இதனிடையே, தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட 'சங்கத்தமிழன்' படமும் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 'பிகில்', 'கைதி' என்று இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதால், போதிய திரையரங்குகள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இதனால் அக்டோபர் மாதமே நல்ல தேதி ஒன்றை முடிவு செய்யலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு.
இதனால், அக்டோபர் மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் 2 படங்கள் வெளிவரக்கூடும். இதற்கு விநியோகஸ்தர்கள் தரப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஒன்று கமர்ஷியல் படம், மற்றொன்று எதார்த்தமான படம். ஆகையால் இரண்டுமே வெளிவந்தால் ஒன்றும் பிரச்சினை இருக்காது என்று விநியோகஸ்தர்கள் தரப்பு கருதுகிறது.
இதனிடையே, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'சிந்துபாத்' படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தின் நஷ்டத்தை 'மாமனிதன்' பட வெளியீட்டு சமயத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்று விநியோகஸ்தர்கள் தரப்பு காத்திருக்கிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.