

நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். தற்போது நடிகர் விஷால் மூலம் அந்தக் கனவு நிறைவேறியுள்ளது என்று இயக்குநர் சுந்தர்.சி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி விஷால், தமன்னா நடிப்பில் 'ஆக்ஷன்' படத்தை இயக்கி வருகிறார். 'மத கஜ ராஜா', 'ஆம்பள' படங்களைத் தொடந்து சுந்தர்.சி - விஷால் இணையும் மூன்றாவது படம் 'ஆக்ஷன்'.
படம் குறித்து இயக்குநர் சுந்தர்.சி கூறுகையில், ''விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம். இப்போது 'ஆக்ஷன்' படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம். நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். தற்போது நடிகர் விஷால் மூலம் அந்தக் கனவு நிறைவேறியுள்ளது
எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும் , ஜெய்ப்பூர், டெல்லி, ஹைதராபாத் மற்றும் சென்னையில் 'ஆக்ஷன்' படமாக்கப்பட்டது. அதேபோல் இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே ஆக்ஷன் காட்சிகள் அதிகமான திரைப்படம் இது தான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன.
இப்படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சி நிரம்பிய திரைப்படம் என்பதால் விஷால் நடித்து வரும் இப்படத்திற்கு 'ஆக்ஷன்' என்றே பெயர் வைத்துவிட்டோம். ஒரு படத்திற்கு வெகு முக்கியமானது டைட்டில் தான். படத்தின் மையத்தை அதில் சொல்லிவிட்டால் எதிர்பார்த்து வரும் ரசிகன் ஏமாறமாட்டான். அதுமட்டுமல்லாமல், தற்போது தமிழ்ப் படங்களை இந்தி ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்களும் ஆதரித்து வருவதனால் இந்த தலைப்பு அணைத்து மொழிகளிலும் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று திட்டமிட்டு வைத்துள்ளோம்.
இந்தக் கதைக்கு நல்ல உடல்வாகுடன் டூப் போடாம சண்டைக் காட்சிகளில் நடிக்க ஒரு கதாநாயகன் தேவைப்பட்டதால் நடிகர் விஷால் சரியாக இருப்பார் என்று படக்குழுவினருக்குத் தோன்றியது. மேலும் இப்படத்தில் சுபாஷ் என்கின்ற கதாபாத்திரத்தில் மிலிட்டரி ஆபீஸராக விஷால் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மற்றும் அகான்ஸா பூரி என்பவர் பக்கா ரெளடித்தனம் செய்யும் கதாபாதிரத்தில் நடித்துள்ளார்.
இவர்களைத் தவிர, அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங், ராம்கி, யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரும்'' என்றார் சுந்தர். சி.
திரைக்கதையை சுந்தர்.சியுடன் இணைந்து சுபாவும் வெங்கட் ராகவனும் எழுதியுள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படத்துக்கு டியூட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார். பத்ரி வசனம் எழுதியுள்ளார்.