

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ஓர் அரசியல்வாதியால் ஆபத்துகள் நேர்ந்தால், அதே சமயத்தில் அவரது காதல் தடைபட்டால் அதுவே 'சிக்சர்'.
கட்டிடப் பொறியாளர் ஆதி (வைபவ்) ஆறு மணி என்றால் அலாரம் அடித்த மாதிரி வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடுவார். 5.30 மணிக்கே அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கிவிடுவார். அப்படி ஒரு மாலைவேளையில் பைக் மக்கர் செய்ய, கடற்கரையோரம் வண்டியை நிறுத்திவிட்டு காற்று வாங்குகிறார். அந்த நேரத்தில் ஆளும்கட்சி எம்.எல்.ஏவுக்கு (ஆர்.என்.ஆர். மனோகர்) எதிரான போராட்டம் பெசன்ட் நகர் கடற்கரையில் நடக்கிறது. மாணவிகளுக்குப் பாலியல் வலை வீசி, அவர்களைத் தவறாக வழிநடத்தி, எம்.எல்.ஏவுக்கு அடிபணியவைத்த பேராசிரியை விமலா ராணியைக் கைது செய்யக் கோரி போராட்டம் நடைபெற, அங்கு வைபவ்வும் இருக்க, அவர்தான் போராட்டத்தின் தலைவன் என்று எம்.எல்.ஏ ஆட்கள் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். இதனால் பேராசிரியை விமலா ராணி கைது செய்யப்படுகிறார். எம்.எல்.ஏ சிறை செல்ல நேரிடுகிறது.
இதனிடையே அந்தப் போராட்டத்தை தொலைக்காட்சியில் நேரலை செய்யும் செய்தியாளர் கிருத்திகா (பல்லக் லால்வாணி) வைபவ்வை புகைப்படம் எடுத்து போராட்டத் தலைவன் என்பதை மையமாக்கி செய்தியாக்குகிறார். இதனால் மிரட்டலுக்கு ஆளாகும் வைபவ், நேரடியாக தொலைக்காட்சி நிறுவனத்துக்குச் சென்று கலாட்டாவில் ஈடுபட, பல்லக் லால்வாணியைக் கண்டதும் காதல் வயப்படுகிறார். தனக்கு இருக்கும் பாதிப்பை மறைத்துக் காதலிக்கிறார்.
இந்த சூழலில் அரசியல்வாதியின் பழிவாங்கும் படலத்திலிருந்து வைபவ் தப்பித்தாரா, மாலைக்கண் நோய் பாதிப்பை மறைத்து காதலியைக் கரம் பிடித்தாரா போன்ற கேள்விகளுக்கு ஜாலியும் கேலியுமாகப் பதில் சொல்கிறது திரைக்கதை.
நோ சீரியஸ், ஒன்லி காமெடி என்பதையே தாரக மந்திரமாகக் கொண்டு இயக்குநர் சாச்சி காமெடிப் படம் ஒன்றைக் கொடுத்துள்ளார். இயக்குநராக அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்.
அலட்டிக்கொள்ளாத நடிப்பு, சுய கலாய்ப்பு, சொதப்பியதை சரிசெய்ய முயலும் சமாளிபிகேஷன் என படம் முழுக்க யதார்த்தமாக நடித்துள்ளார் வைபவ். அவர் மேல் பாவம், பரிதாபம் வராத அளவுக்கு இயல்பான இளைஞனைக் கண்முன் நிறுத்துகிறார்.
பல்லக் லால்வாணி வைபவ்வின் காதலியாகவும், அன்பை வெளிப்படுத்தும் சிறந்த தோழியாகவும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். உண்மையான நேசத்தை அவர் உணர்த்தும் விதம் அழகு.
சதீஷ் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். அவரைக் காட்டிலும் ராதாரவியும் இளவரசுவும் ஸ்கோர் செய்கிறார்கள். ஏ.ஜே.வைக் கலாய்க்கும் இடத்தில் இளவரசு தனித்து நிற்கிறார். ஸ்ரீரஞ்சனி, ராமர், ஆர்.என்.ஆர். மனோகரின் தம்பியாக நடித்த ஏ.ஜே.ஆகியோரும் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஜிப்ரானின் பின்னணி இசை மட்டும் ஓ.கே.ரகம். பாடல்கள் மனதில் நிற்கவில்லை. ஜோமின் இரண்டாம் பாதியின் இழுவையைக் கொஞ்சம் கத்தரி போட்டு சரிசெய்திருக்கலாம்.
பெசன்ட் நகர் கடற்கரையில் நடக்கும் போராட்டத்தைக் காட்சிப்படுத்திய விதம் அபத்தமாகவே இருந்தது. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவ வைபவ், அதை சரிசெய்துகொள்ள எந்த முயற்சியையும் மேற்கொள்ளாதது ஏன், அதுகுறித்து அவரது பெற்றோரோ, காதலியோ, நண்பர்களோ கொஞ்சமும் கவலைப்படாமல் இருப்பது நம்பும்படியாக இல்லை. ஆறு மணிக்கு மேல் மிகப்பெரிய அளவில் எந்தப் பிரச்சினையையும் வைபவ் சந்திக்காதது ஆச்சரியம்.
வைபவ்வுக்கு மாலைக்கண் பிரச்சினை இருப்பதை வில்லன் கோஷ்டி கடைசியில் தெரிந்துகொள்வது சிரிப்பு ரகம். கல்லூரி மாணவிகளை பாலியல் தேவைக்குப் பயன்படுத்தும் விவகாரம் சமகால அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால், அதை லேசுபாசாக அணுகியிருப்பது அதன் தன்மையை நீர்த்துப்போகச் செய்கிறது. சின்னதம்பி படத்தில் கவுண்டமணி பேசிய வசனங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. அதற்கு நன்றி கூட சொல்லாதது என்ன நியாய(ம்)மாரே?
லாஜிக் மறந்து சிரிக்க விரும்புபவர்கள் இந்த சிக்சரை ரசிக்கலாம்.