

மகராசன் மோகன்
நாட்டிலேயே முதலாவதாக பெரிய அளவிலான எபிக் திரை கொண்ட திரையரங்கை ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் கியூப் சினிமா நிறுவனம் நிறுவியுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் படங்களை பல மடங்கு துல்லியமாக, தெளிவாக காட்டக்கூடியது எபிக் திரை. நாட்டிலேயே முதல்முறையாக ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் எபிக் திரையுடன் கூடிய திரையரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட எபிக் திரை 100 அடி நீளம், 54 அடி உயரம் கொண்டது. தெற்காசியாவின் மிகப்பெரிய எபிக் திரை என்ற சிறப்பம்சமும் இதற்கு உண்டு. இந்த திரையரங்கை ‘வி செல்லுலாயிட்’ நிறுவனம் நடத்துகிறது.
இந்த அரங்கின் முதல் திரைப்படமாக, பிரபாஸ் நடித்துள்ள ‘சாஹோ’ திரையிடப்பட்டுள்ளது. இதையொட்டி 29-ம் தேதி அங்கு நடந்த நிகழ்ச்சியில் ‘சாஹோ’ திரைப்படத்தின் முக்கிய கலைஞர்களுடன், தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
விழாவில் அவர் பேசும்போது, ‘‘நாட்டின் முதல் பெரிய திரை கொண்ட அரங்கு என கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் முதல் படமாக ‘சாஹோ’ வெளிவருகிறது. அப்பா சிரஞ்சீவி நடித்த ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படமும் இங்கு விரைவில் வெளியாக உள்ளது. அந்த படத்தையும் இங்கு வந்து நிச்சயம் பார்ப்பேன். இதுபோன்ற பிரம்மாண்ட திரையரங்குகள் அதிகம் திறக்கப்பட்டால், திரைத் தொழில் இன்னும் சிறக்கும்’’ என்றார்.
நாட்டிலேயே சிறந்த தொழில்நுட்ப வசதிகள்அனைத்தும் இந்த எபிக் திரையரங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, 2 மல்டிபிளக்ஸ் அரங்கங்களும் இந்த வளாகத்தில் உள்ளன. திரைப்படம் பார்க்கும்போது சிறு இடையூறும் ஏற்படாத வகையில், சினிமா பார்ப்பதை ஒரு சுகமான அனுபவமாக மாற்றுவதற்கேற்ப வசதியான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரங்கு கட்டமைப்பு குறித்து கியூப் சினிமாஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் ரோஹத்கி பேசும்போது, ‘‘நம்பமுடியாத ஆச்சரியங்களுடன், முதல்தரமான அம்சங்களுடன், வீட்டில் தொலைக்காட்சியில் பார்த்தால் ஒருபோதும் கிடைக்காத அனுபவத்தை தரக்கூடிய வகையில் இந்த எபிக் திரையரங்கு இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல இடங்களில் இதுபோன்ற எபிக் திரைகள் வந்துவிடும்’’ என்றார்.
திரையரங்கை பராமரிக்கும் ‘வி செல்லுலாயிட்’ நிறுவன உரிமையாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான வம்சி கிருஷ்ணா பேசும்போது, ‘‘இந்திய பெருநகரங்களில்கூட கிடைக்காத வாய்ப்பை சூலூர்பேட்டையில் கொண்டுவந்து சினிமா பார்ப்பதில் ஒரு புரட்சியை உண்டாக்கி உள்ளோம். சென்னைக்கு அருகே இருப்பதால் நிறைய தமிழ் மக்களும் இங்கு வருவார்கள். தெற்காசியாவிலேயே மிகப்பெரிய திரையை அறிமுகப்படுத்தி இருப்பது மகிழ்ச்சி’’ என்றார்.