

வி.ராம்ஜி
80ம் ஆண்டில், ‘உதிரிப்பூக்கள்’ நடிகர் விஜயன், 11 படங்களில் நடித்தார். நடிகர் சுதாகர் ஏழு படங்களில் நடித்தார். இதில் முக்கால்வாசிப் படங்கள், மினிமம் பட்ஜெட் படங்களாகவும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்த படங்களாகவும் அமைந்தன.
80ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கமல் - ரஜினியின் காலமும் தொடங்கியது. அதேவேளையில், சிவகுமார், ‘உதிரிப்பூக்கள்’ விஜயன், நடிகர் சுதாகர் ஆகியோர் பல படங்களில் நடித்து வந்தார்கள். ‘உதிரிப்பூக்கள்’, ‘கிழக்கே போகும் ரயில்’ படங்களுக்குப் பிறகு விஜயனுக்கும் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்துக்குப் பிறகு சுதாகருக்கும் வரிசையாக படங்கள் வந்துகொண்டே இருந்தன.
அதேபோல், விஜயன் படத்துக்கும் சுதாகர் படத்துக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. படம் ரிலீசானதும், ‘விஜயன் படம் வந்துருக்குப்பா’ என்றும் ‘சுதாகர் நடிச்ச படம் வந்துருக்கு’ என்றும் சொல்லி ஆர்வத்துடன் ரசிகர்கள் படம் பார்த்தார்கள். பெரிய பட்ஜெட் படங்களில்லை. மிதமான பட்ஜெட். அதேசமயம், மினிமம் கியாரண்டி படங்களாக, முதலுக்கு மோசம் தராத படங்களாக, கணிசமான லாபம் தரும் படங்களாக அமைந்தன.
1980ம் ஆண்டில், தேவர் பிலிம்ஸின் ‘அன்புக்கு நான் அடிமை’ படத்தில், ரஜினிக்கு அண்ணனாக, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார் விஜயன். அதேசமயம், ‘ஒளி பிறந்தது’, ‘சுஜாதா’, ‘தனிமரம்’, ‘தெருவிளக்கு’, ‘தைப்பொங்கல்’, ’பெளர்ணமி நிலவில்,டி.ராஜேந்தரின் ’வசந்த அழைப்புகள், ’வள்ளிமயில்’, ‘வேலி தாண்டிய வெள்ளாடு’ என்று பல படங்களில் நடித்தார் விஜயன். மன உணர்வுகளையும் குடும்ப உறவுகளின் பிக்கல்சிக்கல்களையும் சொன்ன படங்களாகவே பலதும் அமைந்தன. போதாக்குறைக்கு, விஜயனின் அடர்த்தியான தலைமுடி, அவரின் ஹேர் ஸ்டைல், அவர் கைகளை ஒருமாதிரியாக வைத்துக்கொண்டு நடக்கின்ற விதம், பார்வையில் வில்லத்தனத்தையும் அதேசமயம் கருணையையும் காட்டுகிற லாவகம் என விஜயனை எல்லோருக்கும் பிடித்தது என்றுதான் சொல்லவேண்டும்.
இதேபோலத்தான் சுதாகர். இவரின் சிறிய மூக்கும் வித்தியாசமான வகிடு கொண்ட ஸ்டைலும் பலரையும் கவர்ந்தது. அந்தக் காலத்தில் சிவாஜி, கமல், ஜெய்சங்கருக்குப் பிறகு ரஜினி ஸ்டைலுடன் எல்லோரும் முடி வைத்துக்கொண்டிருந்த காலம் வந்த போது, தடக்கென்று வந்து கவனம் ஈர்த்த சுதாகரின் தலைமுடி ஸ்டைலிலும் அவரின் அப்பாவித்தனமான முகத்திலுமாக அவருக்கு ரசிகர்களானார்கள் பலரும்.
1980ம் ஆண்டில், நடிகர் சுதாகர், பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். ‘ஆயிரம் வாசல் இதயம்’, ‘எங்க ஊரு ராசாத்தி’, ‘கரும்புவில்’, ‘குருவிக்கூடு’, ‘சின்னச்சின்ன வீடு கட்டி’, ’ருசி கண்ட பூனை’ என ஏழு படங்களில் நடித்தார். ‘பொன்மானைத்தேடி...’ பாடல் இன்றைக்கும் பாப்புலர் லிஸ்ட் பாடல்களில் உள்ளது. ‘மீன்கொடித்தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்’ பாடலும் செம ஹிட்டு.
‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ராதிகாவும் சுதாகரும் அறிமுகமானார்கள். படத்தின் பிரமாண்ட வெற்றியால், இந்த ஜோடி பேசப்பட்டது. பின்னாளில், ‘அலைகள் ஓய்வதில்லை’ ஜோடி கார்த்திக்கும் ராதாவும் எப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்தார்களோ, அதேபோல, 80ம் ஆண்டில் வெளியான பல படங்களில், சுதாகர் - ராதிகா ஜோடியே நடித்தார்கள்.
இவை அனைத்துமே மிகப்பெரிய வெற்றிப்படங்கள் இல்லைதான். அதேசமயம் படுதோல்வியை இந்தப் படங்கள் சந்திக்கவும் இல்லை. இவை எல்லாமே மினிமம் கியாரண்டி படங்களாக அமைந்தன. தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் லாபத்தைக் கொடுத்தன.
கமலும் ரஜினியும் ஹிட் மேல் ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தாலும் சுதாகரும் விஜயனும் நடுநடுவே விஜய்பாபுவும் (இப்போது சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்) நிறைய படங்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.
எண்பதுகளின் மத்தியில்தான், மோகன், விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ், பிரபு ஆகியோரின் ராஜாங்கம் பட்டொளி வீசிப் பறந்தது.