தீபாவளி நாளில் மோதும் மூன்று பெரிய படங்கள்: திரையரங்குகள் கிடைக்குமா?

தீபாவளி நாளில் மோதும் மூன்று பெரிய படங்கள்: திரையரங்குகள் கிடைக்குமா?
Updated on
2 min read

விஜய்யின் 'பிகில்', கார்த்தியின் 'கைதி', விஜய் சேதுபதியின் 'சங்கத் தமிழன்' ஆகியவை தீபாவளி போட்டியில் இணைந்துள்ளன.

கடந்த பொங்கலுக்கு ரஜினிகாந்தின் 'பேட்ட', அஜித்தின் 'விஸ்வாசம்' வெளியானதிலிருந்து, பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது தமிழ் சினிமாவில் மீண்டும் ட்ரெண்டாக மாறிவிட்டது. அதற்கு முன், பெரிய படங்கள் தனியாக வெளியாகி, அரங்குகள் நிரம்புவதைத் தான் துறை விரும்பியது. ஆனால் பண்டிகை நாள் அன்று ரசிகர்கள் திரையரங்கில் திரைப்படம் பார்க்க விரும்புகின்றனர். அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கின்றனர்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி அன்று பார்க்க மூன்று படங்கள் உள்ளன. ஆனால் திரையரங்குகளில் கூட்டம் குறைந்து வருகிறது என்று சொல்லிக்கொண்டிருந்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் இந்தப் புது ட்ரெண்ட் பற்றி தீர்மானிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர்.

200 கோடி ரூபாய் என்ற பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கும் 'பிகில்' தீபாவளி அன்று வெளியாகும் என ஏஜிஎஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாதி 'பிகில்' பற்றிப் பேசுகையில், "இதுவரை நாங்கள் தயாரித்ததில் பிரம்மாண்டமான திரைப்படம் 'பிகில்' தான். இன்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரத்தை வைத்து எடுத்துள்ளோம். நாங்கள் 200 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளோம். அந்த பிரம்மாண்டத்தை மக்கள் ட்ரெய்லர் வரும் போது பார்த்துத் தெரிந்துகொள்வார்கள். நாங்கள் தீபாவளி வார இறுதியில் படத்தை வெளியிடுகிறோம். தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு திரையரங்கிலும் படம் வெளியாகும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

'பிகில்' படத்துக்கு அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகள் கிடைக்குமா என்று கேட்டதற்கு, அதிக பட்ஜெட் இருக்கும் படம் தான் அதிக திரையரங்குகளைப் பெறும் என்றார். மேலும், "ஒரு வெளியீட்டுத் தேதியைச் சொல்லிவிட்டு சரியாக வெளியிடும்போது, படம் அதிக எண்ணிக்கையிலான திரைகளைப் பெறும். திரையரங்க உரிமையாளர்களும், விஜய் போன்ற முன்னணி நடிகர் நடிக்கும், பெரிய ரசிகர் கூட்டத்தை ஈர்க்கும் 'பிகில்' போன்ற பெரிய படங்களைத் தான் விரும்புவார்கள்" என்றார்.

ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம், சொன்ன தேதியில் படத்தை வெளியிடும் வழக்கம் உள்ளவர்கள் என்பதால், 'கைதி' அல்லது 'சங்கத்தமிழன்' இந்தப் போட்டியிலிருந்து விலகி, பெரிய போட்டி இல்லாத வார இறுதியில் வெளியாகும் என்று வர்த்தக வட்டாரங்கள் நம்புகின்றன.

மிகப்பெரிய திரையரங்க குழுமத்தின் உயரதிகாரி ஒருவர் பேசுகையில், "எப்படியும் ஒரு படம் பின் வாங்கிவிடும் என்றே நினைக்கிறேன். அப்படி பின்வாங்கும் படம், பெரிய வெளியீடு இல்லாத ஒரு வார இறுதியில் வெளியாகலாம். ஆனால், ஒரே நேரத்தில் மூன்று பெரிய படங்கள் வெளியாகும் போது, வருவாய் பகிர்மானம் குறித்த ஒப்பந்தம் வரும்போது திரையரங்குகளால் வலிமையாகப் பேச முடியும்" என்றார்.

இன்னொரு கோணத்தில் இதைப் பார்க்கும் 'கைதி' தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தமிழகத்தில் இந்த மூன்று படங்களையும் வெளியிடத் தேவையான திரையரங்குகள் இருப்பதாகக் கூறுகிறார்.

"முன்னதாக வெறும் 70-100 திரைப்படங்கள் தான் எடுக்கப்பட்டன. பெரிய படங்கள் பண்டிகை காலங்களில் மட்டுமே வெளியாகும். மக்கள் வருவார்கள். ஆனால் மல்டிப்ளக்ஸ் வளர்ச்சிக்குப் பின் திரைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஒரு மல்டிப்ளக்ஸில் 6 திரைகள் இருந்தால் ஒரே படத்தை அனைத்துத் திரைகளிலும் எப்படிப் போட முடியும்? பண்டிகை வார இறுதி என்பதால் இரண்டாவது படத்துக்கான தேவை இருக்கிறது" என்கிறார் எஸ்.ஆர்.பிரபு.

- உத்தவ் நாயக் (தி இந்து ஆங்கிலம்) | தமிழில்: கா.கி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in