

இன்றைய தலைமுறையில் நடிக்க வரும் இளைஞர்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியவில்லை என நடிகர் தனுஷ் பேசியுள்ளார்.
தனுஷ் - வெற்றிமாறன் மீண்டும் இணையும் அசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை மாலை நடந்தது. இதில் தனுஷ் பேசியதாவது:
"இந்தப் படத்தில் நிறைய திறமையானவர்கள் இருக்கிறார்கள். ஒருவரை மற்றொருவர் மிஞ்சி என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருந்தனர். எப்படி என்றே தெரியவில்லை. அப்படித்தான் கென் இதில் நடிக்க வந்தார். நான் அவர் நடிப்பைப் பற்றி எதுவும் எதிர்பார்க்கவில்லை.
பாவம் சின்னப் பையன் நடிக்க வந்திருக்கிறார். நாம் எல்லோரும் இங்கிருப்பதால் பயப்படப்போகிறார். நாம் தைரியம் சொல்வோம் என்று அவரிடம் சென்று நம்பிக்கையாக நடி என்றெல்லாம் தைரியம் சொன்னேன்.
ஆனால் அவர் அதைப் பற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இங்கு அவர் பேசியதிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்கும். எங்கள் அனைவரையும் விட அவர் தான் தன்னம்பிக்கையுடன் பேசிவிட்டுச் சென்றார். மிகவும் இயல்பாக நடித்தார்.
வெற்றியிடம், இந்தகாலத்துப் பசங்களுக்குப் பயம் என்றால் என்னவென்றே தெரியவில்லை என்று சொன்னேன்.அதை சொன்னவுடன் தான், அடடா இந்த காலத்துப் பசங்க என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டோமே. நாம் எங்கு இருக்கிறோம் என்று யோசித்தேன். கென் சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.
கென் மட்டுமல்ல, டிஜே, அம்மு என படத்தில் நடித்திருக்கும் அத்தனை இளைஞர்களுமே அற்புதமாக நடித்திருக்கிறார்கள். இன்றைய தலைமுறையின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. சற்று பயமாகவும் இருக்கிறது. இவர்களையெல்லாம் பார்க்கும்போதுதான் நானெல்லாம் வரும்போது மக்காக இருந்திருக்கிறேன் என்பது புரிந்தது.
16-17 வயதில் நடிக்க ஆரம்பித்து 28-29 வயதுக்குப் பிறகுதான் ஏதோ எனக்கு நடிக்க வந்தது. எனது பழைய படங்கள் எல்லாம் இப்போது பார்த்தால் பயமாக இருக்கிறது". இவ்வாறு தனுஷ் பேசினார்.