

சக நடிகர் பார்த்து பயப்பட வேண்டிய நடிப்பு மஞ்சு வாரியருடையது என்று நடிகர் தனுஷ் பேசியுள்ளார்.
தனுஷ் - வெற்றிமாறன் மீண்டும் இணையும் 'அசுரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை மாலை நடந்தது. வெக்கை என்ற நாவலின் அடிப்படையில் உருவாகும் படம் இது. இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். தமிழில் அவருக்கு இதில் முதல் படமும் கூட. இசை வெளியீட்டு விழாவில் அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசினார் தனுஷ்.
"காதல் கொண்டேன் சமயத்தில் நாகேஷ் சாரிடம் நிறைய பேசுவேன். எப்படி நடிக்கிறாங்க பாருங்க சார், நானும் அப்படி நடிக்க வேண்டும் என்று மிக ஆர்வமாகச் சொல்லுவேன். அப்போது அவர் , 'டேய் யார் உன் கண் முன்னால் பயங்கரமாக நடிக்கிறார்கள் என்று தெரிகிறதோ அதுதான் சுமாரான நடிப்பு. நடிப்பதே தெரியாமல் நடிப்பதுதான் பெரிய நடிப்பு' என்றார்.
அப்படிப் பார்த்து பயப்பட வேண்டிய ஒரு நடிகை மஞ்சு வாரியர். அவர் நடிப்பதே தெரியாது. எப்படி ஒரு கதாபாத்திரமாக நடித்துவிட்டு சட்டென இயல்பாக மாறிவிடுகிறார் என்பதே எனக்குத் தெரியவில்லை. சில முக்கியமான காட்சிகளில் நடித்துவிட்டு என்னால் அந்த கதாபாத்திரத்திலிருந்து சட்டென வெளியே வர முடியாது. அப்படியே இருப்பேன். ஆனால் அவர் நடித்து முடித்த அடுத்த நொடியே ஜாலியாக சிரித்துக் கொண்டிருப்பார். எப்படி அவரால் முடிகிறது என்பதே தெரியாது" என்று குறிப்பிட்டார் தனுஷ்.