வடசென்னைக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா? - தனுஷ் பதில்

வட சென்னையில் தனுஷ் | கோப்புப் படம்
வட சென்னையில் தனுஷ் | கோப்புப் படம்
Updated on
1 min read

'வட சென்னை' படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து தனக்கு வருத்தமா, இல்லையா என நடிகர் தனுஷ் பேசியுள்ளார்.

தனுஷ் - வெற்றிமாறன் இணையின் 'வட சென்னை' படம், விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பிலும் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் 2019 தேசிய விருதுகள் பட்டியலில் தமிழ் படங்கள் அதிகம் இடம் பெறவில்லை.

தனுஷ் - வெற்றிமாறன் மீண்டும் இணையும் 'அசுரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை மாலை நடந்தது. இதில் பேசிய தனுஷ், "எந்தப் படத்திலிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது.

நாம் அக்கறையுடன் செய்வோம். வருவது வரட்டும் என்று வெற்றிமாறன் சொல்லுவார். அதிலிருந்து நானும் என் எதிர்பார்ப்புகளை நிறுத்திவிட்டேன். ஒரு குழுவாக நாங்களும் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

'வடசென்னை' படத்துக்கு தேசிய விருது கிடைக்கவில்லையே என்பது எங்கு போனாலும் முதல் கேள்வியாக இருக்கிறது. எங்களை விட உங்களுக்குத் தான் எதிர்பார்ப்பு அதிகம் இருந்திருக்கிறது. அப்படியென்றால் அந்தப் படம் ஏதோ ஒரு தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது இல்லையா. அது போதும் எங்களுக்கு.

ஆம், நான் வருத்தப்பட்டேன். ஆனால் அது எனக்காகவோ, வெற்றிமாறனுக்காகவோ அல்ல. நாங்கள் 2010-லேயே வாங்கிவிட்டோம். அதற்கு மேல் வேண்டுமென்ற பேராசை எங்களுக்குக் கிடையாது. நாங்கள் யோசித்தது 'பரியேறும் பெருமாள்' மாரி செல்வராஜுக்காக, 'ராட்சசன்' ராம்குமாருக்காக, மேற்கு தொடர்ச்சி மலை இயக்குநருக்காக.

விருது கிடைக்கும் போது குதித்ததும் இல்லை, கிடைக்காத போது துடித்ததும் இல்லை. அதை நினைத்துப் படம் எடுப்பதும் இல்லை. மக்களுக்குப் பிடிக்கவே படம் எடுக்கிறோம். அவர்களுக்குப் பிடிக்கும் அந்தக் கௌரவம் போதும். வெற்றி இதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டாம் என்று சொன்னார். ஆனால் மனதில் இருப்பதைச் சொல்கிறேன். இதிலென்ன தவறு. அவ்வளவுதான்" என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in