

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் பாடல்கள் மீண்டும் யூ-டியூப் பக்கத்துக்கு வந்துள்ளன.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிகுமார், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. நீண்ட நாட்களாகத் தயாரிப்பிலிருந்து வரும் இப்படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் மீதிருக்கும் அனைத்து பிரச்சினைகளும் பேசி தீர்க்கப்பட்டு, செப்டம்பர் 6-ம் தேதி வெளியீடு என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, இப்படத்தின் 'மறுவார்த்தை பேசாதே', 'விசிறி' மற்றும் 'நான் பிழைப்பேனோ' பாடல்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. மேலும், படத்தின் டீஸருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவை அனைத்துமே கவுதம் மேனனின் 'ஒன்றாக' யூ டியூப் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன.
சில மாதங்களுக்கு முன்பு 'எனை நோக்கி பாயும் தோட்டா' சம்பந்தப்பட்ட அனைத்து பாடல்கள் மற்றும் டீஸர் ஆகியவை 'ஒன்றாக' யூ டியூப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டன. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பைனான்ஸ் பிரச்சினையிலிருந்ததால், படத்தின் பாடல்கள் நீக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், படக்குழுவினர் எதற்காக நீக்கினார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவே இல்லை.
இந்நிலையில், செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ள சூழலில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் பாடல்கள் அனைத்துமே மீண்டும் ஒன்றாக யூ-டியூப் பக்கத்தில் வந்துள்ளது. இதனை படக்குழுவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
'எனை நோக்கி பாயும் தோட்டா' பாடல்கள் அனைத்துமே முன்பு இருந்த அதே எண்ணிக்கையிலான பார்வைகளுடன் திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 6-ம் தேதி 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் அக்டோபர் 4-ம் தேதி 'அசுரன்' என ஒரு மாத இடைவெளியில் தனுஷின் இரண்டு படங்கள் வெளியாவதால், அவருடைய ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்