

'பிகில்' படத்துடன் தீபாவளிக்குப் போட்டியாக 'கைதி' மற்றும் 'சங்கத்தமிழன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளன.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதில் விஜய் தன் படப்பிடிப்பு பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்த மாதத்துக்குள் அந்தப் பணிகளையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்தப் படம் தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இம்முறை அக்டோபர் 27-ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. ஆகையால் அக்டோபர் 24 அல்லது 25 ஆகிய தேதியில் வெளியிடலாம் என்று 'பிகில்' படக்குழு முடிவு செய்துள்ளது.
பண்டிகைக்காலம் என்பதால் 'பிகில்' படத்துடன் மற்றொரு படம் வரலாம் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கோரிக்கை வைத்தார்கள். இதன்படி எந்தப் படம் வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 25) இரண்டு படங்கள் தீபாவளி வெளியீட்டை உறுதி செய்துள்ளனர். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'சங்கத்தமிழன்', கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' படக்குழுவினர் போட்டியிட்டுக் கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
3 படங்கள் வெளியானால் ஏதேனும் ஒரு படத்துக்கு வசூல் ரீதியில் பின்னடைவு இருக்கும். இதனால் எந்தப் படம் பின்வாங்கப் போகிறது என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும். 'சங்கத்தமிழன்' மற்றும் 'கைதி' படங்களின் டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
'பிகில்' படத்தில் இதுவரை ஒரே ஒரு பாடல் மட்டுமே வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் 3 படங்களின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்