

வி.ராம்ஜி
‘’விஜயகாந்துக்கு படம் பண்றதா, ரஜினிக்கு பண்றதான்னு குழம்பிக்கிட்டே இருந்தேன். அப்போதான் கலைஞர்தான் அந்த முடிவைச் சொன்னார்’’ என்று இயக்குநர் மனோபாலா தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
நடிகரும் இயக்குநருமான மனோபாலா, தன்னுடைய ‘வேஸ்ட் பேப்பர்’ எனும் இணையதளச் சேனலில் தன் நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்.
மனோபாலா தெரிவித்ததாவது:
கதாசிரியர் கலைமணியும் நானும் இப்ராஹிம் ராவுத்தரையும் விஜயகாந்தையும் சந்தித்து, படம் செய்து தரும்படி கேட்டோம். ‘சரி பண்றேன்’ என்று சொன்னார் விஜயகாந்த். ‘எதுக்கும் கதையைக் கேளுங்களேன்’ என்றோம். கதையைக் கேட்டார். ‘என்னங்க இது... லேடீஸ் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள மாதிரி இருக்கு’ என்றார் விஜயகாந்த். ‘நீங்க ஓகே சொன்னா, கதைல கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து மாத்திருவோம்’ என்றோம். சரியென்றார். அப்படி லேசாக மாற்றி எடுக்கப்பட்டதுதான் ‘சிறைப்பறவை’.
இதன் பிறகு மீண்டும் விஜயகாந்துக்கு படம் பண்ணுகிற வேலையில் இறங்கும் போது, விஜயகாந்த் எங்கேயோ போய்விட்டார். ‘அம்மன் கோவில் கிழக்காலே’ மாதிரி படங்களெல்லாம் வந்து, சூப்பர் ஹீரோவாகவும் ஆக்ஷன் ஹீரோவாகவும் வளர்ந்திருந்தார்.
அதே சமயத்துல, ரஜினியோட ‘ஊர்க்காவலன்’ படம் பண்ணுகிற வாய்ப்பு வந்துச்சு. கலைஞரோட வசனத்துல படம் பண்ணும் வாய்ப்பும் வந்துச்சு. ரஜினி படமா, விஜயகாந்த் படமா, கலைஞரோட படமா... எதைப் பண்றதுன்னு ஏகத்துக்கும் குழம்பிப் போனேன். அப்போ கலைஞர் கூப்பிட்டு, ‘முதல்ல ரஜினி படம் பண்ணுய்யா. அது உன் வாழ்க்கைக்கு வளர்ச்சியா அமையும்’னு சொன்னார்.
அதன்படி ‘ஊர்க்காவலன்’ பண்ணினேன். அப்புறம் விஜயகாந்தை வைச்சு ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்’ பண்ணினேன். அப்போ மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோ அவர். அவர் போட்ட ஒரே கண்டீஷன்... ‘ராதிகா வேணாம். நிறைய படங்கள்ல சேர்ந்து நடிச்சிட்டோம். வேற யாராவது ஹீரோயின்ஸைப் போடுங்க’ன்னு சொன்னார். அதனால, சுஹாசினியையும் ரேகாவையும் புக் பண்ணினோம்.
அப்புறம் அவரோட கம்பெனிக்கு, மம்முட்டியை வைச்சு, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ படம் பண்றதா இருந்துச்சு. திடீர்னு ‘இதுல விஜயகாந்தே நடிக்கிறாரு. அதுக்குத் தகுந்தமாதிரி கதையை மாத்துங்க’ என்று இப்ராஹிம் ராவுத்தர் சொன்னார். அப்படியே பண்ணினோம். அந்தப் படமும் சூப்பர் ஹிட்டாச்சு.
இப்படி விஜயகாந்துக்கும் எனக்குமான தொடர்பு தொடர்ந்துகிட்டே இருந்தது. மிக அற்புதமான மனிதர். நல்ல நேயம் மிக்கவர். அப்படியொரு மனிதரைப் பார்ப்பது அபூர்வம்.
இவ்வாறு மனோபாலா தெரிவித்துள்ளார்.