Published : 25 Aug 2019 11:13 AM
Last Updated : 25 Aug 2019 11:13 AM

’கேப்டன்’ விஜயகாந்த்... இன்று பிறந்தநாள்! 

வி.ராம்ஜி


’முதலுக்கு மோசமில்லை’ என்றொரு வார்த்தை, சினிமாவில் ரொம்பவே பிரபலம். அதிலும் குறிப்பாக, ‘முதல் போட்டா, லாபம் நிச்சயம்’ என்றொரு கியாரண்டியும் சினிமாவில் இருக்கிறது. தமிழ் சினிமா உலகில், இப்படியான தயாரிப்பு நிறுவனங்கள் ஏராளம். நடிகர்கள் ஏகப்பட்ட பேர் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அப்படியானவர்களில் முக்கியமானவர் விஜயகாந்த்.


புகழின் உச்சிக்கும் ‘முதல் போட்டா லாபம் நிச்சயம்’ என்கிற கியாரண்டிக்கும் எடுத்த எடுப்பிலேயே வந்துவிடவில்லை விஜயகாந்த். மதுரையில் ரைஸ்மில்லை நிர்வகித்துக் கொண்டிருந்த விஜயராஜ், சினிமா ஆசையால் சென்னைக்கு வந்தார். ஏறாத கம்பெனி இல்லை. படாத அவமானங்களில்லை. ‘உன் மூஞ்சிக்கெல்லாம் சினிமாவா?’ என்று காயப்படுத்தி, அனுப்பினார்கள்.


ஆனாலும் சளைக்கவில்லை விஜயராஜ். தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தார். இயக்குநர் கே.விஜயனின் ‘தூரத்து இடி முழக்கம்’ படத்தில், கதையின் நாயகனாக அறிமுகமானார் விஜயகாந்த். விஜயராஜ்... விஜயகாந்த் என்றானார். எம்.ஏ.காஜாவின் ‘இனிக்கும் இளமை’ வந்தது. ஆனால் இரண்டு படங்களும் தோல்வியையே சந்தித்தது.


அந்த சமயத்தில்தான் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில், விஜயகாந்த் நடித்தார். ஏற்கெனவே, இவர் இயக்கிய முதல் படம் தோல்வியானது. எனவே இரண்டுபேருக்குமே வெற்றி தேவைப்பட்டது. அப்போதுதான் வெளியானது ‘சட்டம் ஒரு இருட்டறை’. தமிழ் சினிமாவில் விஜயகாந்துக்குக் கிடைத்த முதல் வெற்றி அது.


அடுத்தடுத்து படங்கள் வந்தன. வெற்றியும் தோல்வியுமாக மாறி மாறி வந்தன. ஆக்‌ஷன் ஹீரோ என்று வளர்ந்து கொண்டிருந்தார். அப்போதுதான், திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து ‘ஊமை விழிகள்’ பண்ணினார். அதில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தாலும் விஜயகாந்தால் வெற்றி கிடைத்தது என்று கொண்டாடியது சினிமா உலகம். அதேபோல், விஜயகாந்துக்கும் புகழ் கிடைத்தது. பிறகு, திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினார் விஜயகாந்த். ரசிகர்களும் வெற்றிகளைக் குவித்துக் கொடுத்தார்கள்.


அந்த நேரத்தில், தடக்கென்று ‘வைதேகி காத்திருந்தாள்’ மாதிரியும் பண்ணினார். ’அம்மன் கோவில் கிழக்காலே’ செய்தார். தடக்கென ‘புலன்விசாரணை’ என மிரட்டினார். மளமளவென விஜயகாந்த் முன்னேறினார். தயாரிப்பாளர்கள் லாபம் சம்பாதித்தார்கள். விநியோகஸ்தர்கள் லாபம் பார்த்தார்கள். தியேட்டர்காரர்கள் மகிழ்ந்தார்கள். ‘வசூல் சக்கரவர்த்தி’ என்றானார் விஜயகாந்த்.


ஏ, பி, சி என சென்டர்கள் சொல்லுவார்கள். எல்லா சென்டர்களிலும் விஜயகாந்த் படம் வசூல் குவித்தது. மாசக்கடைசியில் சம்பளம் போடவேண்டுமென்றால், மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்றால், கமர்ஷியல் வரி கட்டவேண்டும் என்றால், விஜயகாந்த் படங்களை மூன்று நான்கு நாளைக்குப் போடுவார்கள், தியேட்டர்களில். வசூல் அள்ளும். சம்பளம் போடப்படும். மின் கட்டணம் செலுத்தப்படும். வரி கட்டிவிடுவார்கள். முன்பு எம்ஜிஆர் படங்களை சொல்லி வந்தவர்கள், பிறகு விஜயகாந்த் படத்தையே நம்பினார்கள்.


இயல்பிலேயே விஜயகாந்த் உதவும் குணம் கொண்டவர் என்கிறார்கள். பணமாகவும் பொருளாகவும் கால்ஷீட்டாகவும் கொடுத்து உதவினார். எல்லாவற்றுக்கும் மேலாக, விஜயகாந்த வீட்டுக்குச் சென்றால், பசியாறிவிடலாம் என்பார்கள். சாப்பிடுவதற்காகவே செல்வார்கள். கல்யாண வீடு போல், மணக்க மணக்க, உணவு பரிமாறிக்கொண்டே இருப்பார்கள்.


விஜயகாந்தால், தயாரிப்பாளரானவர்கள் எத்தனையோ பேர். லாபம் அடைந்தவர்கள் எத்தனையோ பேர். ‘அவரோட நல்ல மனசு யாருக்கும் வராது’ என்று விஜயகாந்தைக் கொண்டாடாத தமிழ் திரையுலகினரே இல்லை.


நடிகர் சங்கத்தலைவராக இருந்த காலம், மறக்கவே முடியாத காலம். மிகச்சிறப்பாக செயல்பட்டார் என்று பாராட்டாதவர்களே இல்லை.
இன்றைக்கு விஜயகாந்த் நடிப்பதில்லை. கட்சியும் தொடங்கிவிட்டார். புரட்சிக்கலைஞர் என்று ஒருகட்டத்தில் கொண்டாடியவர்கள் இன்றைக்கும் கேப்டன் என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அன்பான கேப்டன். அடுத்தவருக்கு உதவுகிற கேப்டன் என்று போற்றிக்கொண்டிருக்கிறார்கள்.


கேப்டன் விஜயகாந்த் எனும் நடிகருக்கு, நல்ல மனிதருக்கு இன்று 25.8.19 பிறந்தநாள். கேப்டனை வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x