Published : 24 Aug 2019 08:57 PM
Last Updated : 24 Aug 2019 08:57 PM

நானே கஞ்சா அடித்திருக்கிறேன்: பாக்யராஜ் 'பகீர்' பேச்சு

புத்தருக்கு போதி மரம் மாதிரி எனக்கு போதை மரம் தான் புத்தி கொடுத்தது. என தனது கஞ்சா அனுபவத்தை 'கோலா' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசினார்.

மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கோலா'. மோத்தி.பா எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட சிலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

போதையை ஒழிக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாகியுள்ளார் மோத்தி.பா. இந்த விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது, "எனர்ஜி என்பது வயது சம்பந்தப்பட்டது அல்ல மனசு சம்பந்தப்பட்டது. சேவிங் பண்ண வந்த ரவுடி கடைகாரனிடம் கிர்த்தா இல்லாமல் செய்தால் தான் விடுவேன். இல்லையென்றால் வெட்டி விடுவேன் என்றானாம். அப்போது அனைவரும் பயந்திருக்கிறார்கள்.

ஆனால், ஒரு சிறுவன் தைரியமாகச் செய்தான். அந்த ரவுடி ஆச்சரியப்பட்டு சிறுவனிடம் 'உனக்குப்பயம் இல்லையா' என்று கேட்டான். அதற்குச் சிறுவன் ’என்னை நீங்கள் வெட்ட அருவாள் எடுக்கும் முன்பாக நான் என் கையில் இருக்கும் கத்தியைப் பயன்படுத்தி விடுவேன்’ என்று சொல்லியிருக்கிறான். துணிச்சலுக்கும் வயசுக்கும் கூட சம்பந்தமில்லை

கஞ்சா குடிப்பதைப் பற்றி ஜாக்குவார் தங்கம் கோபப்பட்டார். நானே கஞ்சா நிறைய அடித்திருக்கிறேன். சிகரெட்டில் கலந்து கோயம்புத்தூரில் கொடுத்தார்கள். சில நேரங்களில் கஞ்சா நல்லவே வேலை செய்யும். ஒருநாள் அது கிர்ர்னு ஏறி அனைவரும் சிரித்துக் கொண்டே இருந்தோம்.

அப்போது தான் யோசித்தேன். 'வாழ்க்கைல என்னமோ சாதிக்கணும்னு நினைத்தோமே..ஆனால் இப்படி இருக்கோமே' என்று அன்று தான் தோன்றியது. புத்தருக்கு போதி மரம் மாதிரி எனக்கு போதை மரம் தான் புத்தி கொடுத்தது. இப்போது சிகரெட்டையும் விட்டுவிட்டேன்" என்று பேசினார் பாக்யராஜ். இதனைத் தொடர்ந்து படக்குழுவினரையும் வாழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x