

ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சத்யராஜ் - சிபிராஜ் இணைந்து புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சத்யா'. ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கிய இந்தப் படம் தெலுங்கு பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஷனம்' படத்தின் ரீமேக்காகும். சத்யராஜ் தயாரித்த இந்தப் படம் டிசம்பர் 8, 2017-ம் ஆண்டு வெளியானது.
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இதே அணி மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். ஆனால், சத்யராஜ் தயாரிக்காமல் மகன் சிபிராஜுடன் இணைந்து நடிக்கவுள்ளார். கிரியேட்டிவ் எண்டர்டெய்னர் சார்பில் தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் இப்படத்தினை தயாரிக்க உள்ளார்கள்.
ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கவுள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், சிபிராஜ், நாசர் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. சைமன் கே.கிங் இசையமைக்கவுள்ளார். ஜான் மகேந்திரன் வசனங்கள் எழுதியுள்ளார். தற்போது இதர தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. அடுத்தாண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.