

நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரனை நடிகர் அஜித் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பில் எடுத்த புகைப்படங்களை குற்றாலீஸ்வரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குற்றால் ரமேஷ் என்கிற குற்றாலீஸ்வரன் இந்தியா சார்பாக சர்வதேச அளவில் பல நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர். 1996-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது.
தற்போது நடிகர் அஜித்குமாரை சந்தித்துள்ள குற்றாலீஸ்வரன், "தலயுடன் நம்பமுடியாத ஒரு மாலை. நான் உங்கள் பெரிய ரசிகன் என்று தல சொல்லும்போது, இந்த மனிதனின் எளிமை என்னை அசரடித்துவிட்டது. விளையாட்டு மேம்பாடு சம்பந்தமாக சில முன்னெடுப்புகள் குறித்து ஆலோசித்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்தின் பகிர்ந்துள்ளார்.
இதனால், அஜித்குமார் குற்றாலீஸ்வரனுடன் இணைந்து விளையாட்டுத் துறை சம்பந்தமாக ஏதோ பயிற்சி மையம் அல்லது திட்டத்தைத் தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில் கோவையில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில் அஜித் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய கெட்டப்
குற்றாலீஸ்வரன் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை விட்டு வந்து, தாடி மீசை இல்லாமல் காணப்படுகிறார். வேதாளம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என கடந்த சில வருடங்களாகவே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் அஜித், ஹெச்.வினோத் இயக்கும் அடுத்த படத்தில் இந்த புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாகும் இதை போனி கபூர் தயாரிக்கிறார்.