

பார்த்திபன் ஒருவரே இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் 'ஒத்த செருப்பு'. இதில் படம் முழுக்கவே பார்த்திபன் கதாபாத்திரம் மட்டுமே இருக்கும். வேறு எந்தவொரு கதாபாத்திரமுமே கிடையாது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்து இறுதிகட்டப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தார் பார்த்திபன்.
இந்த படத்தில் ஒலி வடிவமைப்பை 'எந்திரன்', '2.0' உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்த ரசூல் பூக்குட்டி வடிவமைத்துள்ளார். தற்போது இந்தப் படம் ASIAN BOOK OF RECORDS புத்தகத்தில் இந்தப் படம் இடம்பெற்றிருக்கிறது.
இந்த விழாவில் பேசிய பார்த்திபன், " 'ஒத்த செருப்பு' படத்தை ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியிட ப்ளான் பண்ணியிருந்தேன். விநியோகஸ்தர்களுக்கு இம்மாதிரியான படத்தின் மீது அவநம்பிக்கையுண்டு. கண்டிப்பாக இந்தப் படம் ரசிகர்களிடம் சென்றால் ஜெயிக்கும். 'புதிய பாதை' சமயத்திலும் இதே போன்றதொரு சந்தேகம் வந்தது.
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்துக்கும் இதே தான் நடந்தது. அந்தப் படம் சம்பந்தப்பட்ட 40 பேர் படம் பார்த்துவிட்டு நல்லாயில்லை என சொல்லிவிட்டார்கள். ரசிகர்களிடம் சென்று தான் அந்தப் படம் ஜெயித்தது. ரசிகர்களை இந்தப் படம் எந்தளவுக்கு கவரும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் அஜித் படம், விஜய் படம் என்றால் உடனே வியாபாரமாகிவிடும்.
இந்தப் போட்டியில் தான் நம்மளும் ஓட வேண்டியதுள்ளது. ஆகையால் என் படத்துக்கு ஏதாவது ஒரு சிறப்பு தகுதி வேண்டும். 10 மாதக் குழந்தையை 30 மாதமாக சுமக்க வேண்டிய சூழல். இந்தப் படத்தை ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியிட முடியாமல், இன்னும் பிரமுகர்களுக்குப் போட்டுக் காட்டி அதன் மூலம் விளம்பரப்படுத்தலாம் என நினைக்கிறேன்.
புதிய பாதை படத்தைப் பார்த்த சில விநியோகஸ்தர்கள் வர்த்தக ரீதியில் படம் வெற்றி பெறாது என்று சொன்னார்கள். நல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான். படம் பாரத்துவிட்டு மக்கள் சொல்லும் தீர்ப்பைத்தான் நான் பெரிதாகக் கருதுகிறேன். ஒத்தை செருப்பு படத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல ஊடகங்கள் எனக்குத் துணை நிற்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.