

'தர்பார்' படப்பிடிப்பு தளத்தில் ரஜினி பிரமிக்க வைப்பதாக, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தர்பார்'. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. மும்பையில் பலத்த மழை பெய்ததால், ஜெய்ப்பூருக்குப் படக்குழு மாற்றியது குறிப்பிடத்தக்கது.
ரஜினி நடித்த 'தளபதி' படத்துக்குப் பிறகு, இந்தப் படத்துக்குத்தான் ஒளிப்பதிவு செய்து வருகிறார் சந்தோஷ் சிவன். 'தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினியின் எளிமையைப் பார்த்து சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பதிவில்:
"அனைவரையும் சரிசமமாக பாவிக்கும் ஆச்சரியகரமான அன்பும் பிரகாசமும் ரஜினி சாரிடம் உள்ளது. அனைவரையும் எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் அவர் சரிசமமாக நடத்துவது உண்மையில் பிரமிக்க வைக்கிறது”
என்று தெரிவித்துள்ளார். இதை ரஜினி ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள். மேலும், ஜெய்ப்பூர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியுடன் படப்பிடிப்பு வந்த துணை நடிகர்கள் பலரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்பதையும் உறுதி செய்துள்ளது. 'தர்பார்' படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஒரு மாத காலம் இமயமலைக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ளார் ரஜினி.