Published : 22 Aug 2019 07:41 PM
Last Updated : 22 Aug 2019 07:41 PM

பிக் பாஸ் நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்தவொரு பயனும் கிடையாது: இயக்குநர் அமீர் காட்டம்

’எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் அமீர் பேசிய போது..

பிக் பாஸ் நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்தவொரு பயனும் கிடையாது என்று இயக்குநர் அமீர் காட்டமாக பேசினார்.

கவிராஜ் இயக்கத்தில் ஆரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ’எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’. நீண்ட நாட்கள் கழித்து இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பில் இறங்கியுள்ளது ராவுத்தர் பிலிம்ஸ். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாக்யராஜ், அமீர் உள்ளிட்டோர்களுடம் கலந்து கொண்டார்கள்.

இதில் இயக்குநர் அமீர் பேசும் போது, "நான் இந்த விழாவிற்கு வந்ததற்கு இரண்டு காரணங்கள் தான். ஒன்று ஆரியின் வற்புறுத்தல், இரண்டாவது ராவுத்தர் பிலிம்ஸ். அதுமட்டுமில்லாமல், நான் வந்தால் என் மூலம் இந்த படத்திற்கு விளம்பரம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடும், தரமான படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் தான் வந்தேன். என்னைப் பொருத்தவரை திரைத்துறையில் புகழ் நிரந்தரமில்லை.

இப்ராஹிம் ராவுத்தர் மிக எளிமையான மனிதர். அவர் இன்று இருந்திருந்தால் இந்த அரங்கத்தில் எவ்வளவு பெரிய மனிதர்கள் இருந்திருப்பார்கள். மேடை நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட இந்த நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்திருக்கிறது.

விஜயகாந்திற்கு 'கேப்டன்' என்று பெயர் வைத்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக அவரை செதுக்கியவர் ராவுத்தர். அப்படி இருந்த நண்பர்கள் ஏன் பிரிந்தார்கள்?. சினிமா அவர்களைப் பிரித்து விடும். அதேபோல் தான் நானும் பாலாவும். திரைத்துறையில் நன்றி என்பது இருக்காது. அப்படியே இருந்தாலும் அது ஊசி அளவு தான் இருக்கும் என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே, நன்றியுள்ள சமுதாயத்தை உருவாக்குவோம். மேலும், ஜீவி இல்லாத சினிமா என்பதே இல்லை என்று ஒரு காலம் இருந்தது. அப்படிப்பட்ட அவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துக் கொண்டார். அதுதான் சினிமா.

சினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள் தெரியுமா? நட்சத்திரம் என்பது மின்னி மறைவது, அதுபோல தான் சினிமாக்காரர்களும். ஆகவே, புகழும் வெற்றியும் நிரந்தரமில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, சினிமாத்துறையில் இருப்பவர்கள் அதைப் புரிந்துக் கொண்டு வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆகையால், வெற்றியடைந்த பின் மற்றவர்களையும் கைத்தூக்கி விடுங்கள். நீங்கள் போகும் போது உங்களுடன் பயணித்தவர்களையும் உங்களுடனே கூட்டிச் செல்ல வேண்டும்.

எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிப் பேசுவது பிடிக்காது. இருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். அவரை நான் பிரமிப்பாக பார்ப்பேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகை தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்.

அந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நிலைமையைப் பார்த்ததும் கதவை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது. அந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததுக் கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன். மேலும், அந்த நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது” என்று பேசினார் இயக்குநர் அமீர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x