

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கான வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. கவுதம் மேனன் மற்றும் எஸ்கேட் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் நீண்ட வருடங்களாகத் தயாரிப்பிலிருந்து வருகிறது. பல முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் வருகிறது. மேலும், நீண்ட நாட்களாகவே இந்தப் படத்தின் மீதிருக்கும் பைனான்ஸ் பிரச்சினையைத் தீர்க்க பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. எதிலுமே சுமுக முடிவு எட்டப்படவே இல்லை.
இந்நிலையில், கடந்த 10 நாட்களாகவே இந்தப் படத்தின் பைனான்ஸ் சிக்கலுக்குத் தீர்வு காணப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு பைனான்ஸ் கொடுத்தவர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் இடம்பெற்றனர். இதில் ஒரு சுமுக முடிவு எட்டப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
என்னவென்றால், தனக்குள்ள பைனான்ஸ் பிரச்சினையை 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் பாதியையும், 'துருவ நட்சத்திரம்' படத்தில் பாதியையும் தருவதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இதற்கு பைனான்ஸியர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் படம் கூடிய விரைவில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 6-ம் தேதி வெளியிடலாமா என்ற ஆலோசனையில் படக்குழுவும் இறங்கியுள்ளது.
இந்தப் படத்தின் இசை உரிமையை விற்று வந்த பணத்தையும், வேல்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ணுவதாக ஒப்புக் கொண்டு வாங்கிய பணத்தையும் வைத்து தன் பைனான்ஸ் பிரச்சினையைத் தீர்க்க முடிவு செய்திருக்கிறார் கவுதம் மேனன்.