Published : 20 Aug 2019 07:18 PM
Last Updated : 20 Aug 2019 07:18 PM

'மாற்றான்' தோல்விக்கான காரணம்: மனம் திறக்கும் கே.வி.ஆனந்த்

'மாற்றான்' தோல்விக்கான காரணம் குறித்து இயக்குநர் கே.வி.ஆனந்த் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாற்றான்'. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் உருவாக்கிய இந்தப் படம் 2012-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி வெளியானது. ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக சூர்யா நடித்ததிருந்ததால் பெரும் எதிர்பார்ப்புடன் படம் வெளியானது.

ஆனால், எதிர்பார்த்த வரவேற்பை இந்தப் படம் பெறவில்லை. தற்போது மீண்டும் சூர்யாவுடன் கூட்டணி அமைத்து 'காப்பான்' படத்தை உருவாக்கியுள்ளார் கே.வி.ஆனந்த். இதனை விளம்பரப்படுத்துவதற்காக அளித்த பேட்டியில், 'மாற்றான்' படத்தின் தோல்விக்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

அதில், "ரஜினி நடித்த ’சிவாஜி’படத்தின் 'ஒரு கூடை சன்லைட்' பாடல் படப்பிடிப்பு முடிந்து திரும்பும் போது, விமானத்தில் ஒரு பத்திரிகையில், எப்போதும் ஒட்டியிருக்கும் இரட்டையர்கள் பற்றிய கட்டுரை படித்தேன்.

அதை வைத்தே 'மாற்றான் படத்தின் கதையை உருவாக்கினேன். அதன் கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், அது பலவீனமான திரைக்கதையால் பாதிக்கப்பட்டது. அந்தப் படத்தை இயக்கியதற்கு வருத்தப்படவில்லை. படம் எதனால் சரியாக வரவில்லை என்பது எனக்குத் தெரியும்.

முதலில் எழுதப்பட்ட திரைக்கதையில் சூர்யாவின் அப்பா கதாபாத்திரம் வில்லன் கிடையாது. அது ஒரு பழிவாங்கும் கதையாக இருந்தது. பலமுறை பழக்கப்பட்ட கதையை மீண்டும் எடுக்க நான் விரும்பவில்லை. ஆனால் 'மாற்றான்' படத்தின் இறுதியில் சூர்யாவை, 'நீ என் தோல்வியடைந்த ப்ராஜக்ட்' என்று சூர்யாவின் அப்பா சொல்லும் அந்தக் காட்சியை மக்கள் ஏற்கவில்லை" என்று தெரிவித்துள்ளார் கே.வி.ஆனந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x