

'ஃபாரஸ் கம்ப்' இந்தி ரீமேக்கில் ஆமிர் கானின் நண்பராக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்'. இதன் இந்தி ரீமேக் குறித்த பேச்சுவார்த்தை நீண்டகாலமாக நடைபெற்றது. இறுதியில் அதில் ஆமிர் கான் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதில் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாகத் தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்டபோது, ஆமிர் கானுடன் சேர்ந்து நடிக்கவுள்ளவதை உறுதி செய்தார் விஜய் சேதுபதி. ஆனால், என்ன படம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
தற்போது 'ஃபாரஸ் கம்ப்' இந்தி ரீமேக்கான 'லால் சிங் சட்டா' படத்தில் தான் ஆமிர் கானுடன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தில், பப்பா என்ற கதாபாத்திரத்தில் மைகெல்டி வில்லியம்சன் என்ற நடிகர் நடித்திருந்தார். கம்ப் கதாபாத்திரம் ராணுவத்தில் இருக்கும் போது அவரது நண்பனாக இவர் தோன்றுவார்.
அவர் இறந்த பின், கம்ப், தனது வியாபாரத்தின் லாபத்தை பப்பாவின் அம்மாவுக்குத் தருவார். இந்தி ரீமேக்கில் இந்த பப்பா கதாபாத்திரம் தமிழராகச் சித்தரிக்கப்படவுள்ளதாகவும், இதில் தான் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்கில் ஆமிர் கான் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி நடித்த கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ஆமிர் கான் நடிக்கவுள்ளது நினைவுகூரத்தக்கது.