'இந்தியன் 2' அப்டேட்: முதல் முறையாக கமலுடன் இணையும் விவேக்

'இந்தியன் 2' அப்டேட்: முதல் முறையாக கமலுடன் இணையும் விவேக்
Updated on
1 min read

ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தில் முதல் முறையாக கமலுடன் இணைந்து விவேக் நடிக்கிறார்.

மீண்டும் கமல் - ஷங்கர் இணைப்பில் தொடங்கப்பட்ட படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் சுமார் 200 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. சமீபத்தில் சித்தார்த் - ரகுல் ப்ரீத் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினார்கள். இதில் சில காட்சிகளை முடித்துவிட்டு, வெளிநாட்டுக்கு ஓய்வுக்குச் சென்றுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். அங்கிருந்து திரும்பியவுடன் மீண்டும் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு, சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்தப் படத்தில் முதல் முறையாகக் கமலுடன் இணைந்து நடிக்க விவேக் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ்த் திரையுலகில் அனைத்து நடிகர்களுடன் நடித்துவிட்டேன். ஆனால், கமலுடன் மட்டும் நடிக்க முடியவில்லை என்று பல பேட்டிகளில் தன் வருத்தத்தைப் பதிவு செய்தார் விவேக். இதனைப் போக்கும் வகையில் இந்தக் கூட்டணியை தன் 'இந்தியன் 2' படத்துக்கு உறுதி செய்துவிட்டார் இயக்குநர் ஷங்கர்.

'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியை முடித்துவிட்டு, முழுவீச்சில் திரையுலகில் கவனம் செலுத்தவுள்ளார் கமல். 'இந்தியன் 2' படத்தில் நடித்துக்கொண்டே தனது இயக்கத்தில் உருவாகும் 'தலைவன் இருக்கின்றான்' படத்தையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளார் கமல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in