

'துப்பறிவாளன் 2' படத்துக்கான படப்பிடிப்பு இடங்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்
2017-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து, தயாரித்த படம் 'துப்பறிவாளன்'. பிரசன்னா, வினய், இயக்குநர் கே.பாக்யராஜ், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்துக்கு அரோல் கொரேலி இசையமைத்தார்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது. ஆனால், எப்போது தொடங்கும் என்ற தகவலே வெளியாகாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு 'துப்பறிவாளன் 2' உருவாக உள்ளதை விஷால் - மிஷ்கின் கூட்டணி உறுதி செய்தது.
தற்போது அதன் படப்பிடிப்புக்கான பணிகளைத் தொடங்கியுள்ளார் மிஷ்கின். தான் இயக்கி வந்த 'சைக்கோ' படத்தின் பணிகள் முடிந்துவிட்டதால், ’துப்பறிவாளன் 2’ பணிகளைத் தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக இங்கிலாந்தில் உள்ள ஷெர்லாக் அருங்காட்சியகத்துக்குச் சென்றுள்ளார் மிஷ்கின். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் சில இடங்களைத் தேர்வு செய்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆக்ஷன்' படத்தில் தன் பணிகளை முடித்துவிட்டதால், விஷால் 'துப்பறிவாளன் 2' படத்தில் கவனம் செலுத்தவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தை தனது விஷால் பிலிம் ஃபேக்டரி மூலம் பெரும் பொருட்செலவில் உருவாக்க விஷால் திட்டமிட்டுள்ளார்.
முதல் பாகம் போல் அல்லாமல், 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பு முழுக்க வெளிநாட்டிலேயே படமாக்க முடிவு செய்துள்ளார் மிஷ்கின். முதல் பாகத்திலிருந்து பிரசன்னா மட்டுமே, இதில் விஷாலுடன் நடிப்பது உறுதியாகியுள்ளது.