செய்திப்பிரிவு

Published : 19 Aug 2019 10:54 am

Updated : : 19 Aug 2019 15:50 pm

 

'பிக் பாஸ்' சர்ச்சை: போலீஸ் விசாரண கோரும் எஸ்.வி.சேகர்

police-investigation-on-bigg-boss-issue-says-svesekhar
மணிக்கட்டில் கட்டுடன் மதுமிதா

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக, போலீஸ் விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியால் அடிக்கடி சர்ச்சை உருவாகி வருகிறது. இதில் சமீபமாக 'பிக் பாஸ்' வீட்டிற்குள் மதுமிதா தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தி சமூக வலைதளத்தில் பரவியது.

இதைப் பலரும் உண்மையா என்று ஆச்சரியத்துடன் பகிர்ந்து வந்தனர். உண்மையில் நடந்தது என்ன? என்பதை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பவே இல்லை. மாறாக, 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து மதுமிதா வெளியே வந்து கமலுடன் கலந்துரையாடினார். அப்போது, மதுமிதாவின் மணிக்கட்டில் கட்டுப் போடப்பட்டு இருந்தது.

தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக கமல்ஹாசன், "நீங்கள் செய்த காரியம் அனைவருக்குமே ஏமாற்றத்தை அளித்துள்ளது. போட்டியாளர்களின் தைரியம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைச் சோதிப்பதே இந்தப் போட்டி. ஆனால், இந்தக் காயம் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணம் அல்ல" என்று மதுமிதாவைக் கண்டித்தார்.

ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்று பலரும், பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், மதுமிதா இதுவரை எந்தவொரு காரணத்தையும் வெளிப்படுத்தவில்லை. இதனிடையே, நடிகை நளினியின் மகள் எழுதியது என்ற பெயரில் சமூக வலைதளத்தில் ஒரு போஸ்ட் வைரலாகி வருகிறது.

அதில் 'பிக் பாஸ்' வீட்டில் 'ஹலோ' என்ற டாஸ்க் நடந்தது. அனைவருமே ஒற்றை வரியில் ஏதேனும் ஒரு தகவலைத் தெரிவிக்க வேண்டும். அப்போது மதுமிதா "வருண பகவான் கூட கர்நாடக காரரோ, கொஞ்சம் கருணை காட்டி இங்கேயும் மழை கொடுக்கலாமே" என்று தெரிவித்துள்ளார். இதற்கு இதர போட்டியாளர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர். இதனால் தான் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக நளினியின் மகள் எழுதியுள்ள பதிவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பாகப் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பதிவில், "மதுமிதா தற்கொலைக்கு முயன்றது தவறு எனக் கூறி அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்குத் தூண்டியவர் யார் எனக் கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா? ஏன் 60 கேமராவில் சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுதான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை” என்று தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிஎஸ்.வி.சேகர்மதுமிதா சர்ச்சைமதுமிதா தற்கொலை முயற்சிகமல்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author