Published : 18 Aug 2019 10:16 AM
Last Updated : 18 Aug 2019 10:16 AM

12 நிமிட சண்டைக்கு ரூ.80 கோடி- ‘சாஹோ’ நாயகன் பிரபாஸ் நேர்காணல்

கா.இசக்கிமுத்து

நான் மணிரத்னத்தின் பெரிய ரசிகன். ஷங்கருக்கு தெலுங்கில்கூட நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். கவுதம்மேனனும் சிறந்த இயக்குநர். சிறந்த இயக்குநர்கள் நிறைய பேர் இருப்பதால், தமிழில் படம் பண்ணனும் என்று ரொம்ப நாளாகவே யோசிச்சுட்டு இருக்கேன். கூடிய சீக்கிரத்தில் அது நடக்கும்.. என்று குதூகலத்தோடு கூறுகிறார் பிரபாஸ்.

‘பாகுபலி’யைத் தொடர்ந்து, அவர் நடித்துள்ள ‘சாஹோ’ திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. ரூ.300 கோடி பட்ஜெட், சண்டைக்காட்சிக்கு மட்டும் ரூ.80 கோடி என ‘சாஹோ’ படத்தின் பல்வேறு பிரம்மாண்டங்கள் குறித்து அவருடன் பேசியதில் இருந்து..

‘பாகுபலி’க்குப் பிறகு இக்கதையை தேர்வு செய்ய என்ன காரணம்?

மிகப்பெரிய திட்டமிடலோடு நடந்த படம் ‘பாகுபலி’. ஆனால், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என எந்த மொழியில் அது ஹிட்டாகும் என்று தெரியவில்லை. எந்த மொழியில் நன்கு ஓடுகிறதோ, அந்த மொழியில் அடுத்த படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். ‘பாகுபலி’ வெளியாகும் முன்பே ‘சாஹோ’ கதையை சுஜித் என்னிடம் கூறியிருந்தார். இதில் திரைக்கதை முக்கியமானது. ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு திருப்பம் வந்துகொண்டே இருக்கும். ‘பாகுபலி’யைவிட இன்னொரு பிரம்மாண்டத்தை நாம் காட்டிவிட முடியாது. அதனால்தான், திரைக்கதையை மையமாகக் கொண்ட ‘சாஹோ’வை தேர்ந்தெடுத்தேன்.

இனிமேல் பெரிய பட்ஜெட்டில் மட்டும்தான் நடிப்பீர்களா?

இல்லை. அது பெரிய டென்ஷன். இந்த படத்தையே ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிட்டோம். சண்டைக் காட்சிகளுக்காக நிறைய மெனக்கிட்டதால், இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘சாஹோ’வில் 12 நிமிடங்கள் வரும் ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டும் ரூ.80 கோடி வரை செலவிட்டுள்ளோம். நல்ல தரமான படம் கொடுக்க முயற்சித்துள்ளோம்.

நீங்கள் அதிக சம்பளம் கேட்கிறீர்களாமே..

யுவி கிரியேஷன்ஸ் எனது நண்பர்களின் நிறுவனம். அதனால், அவர்களிடம் கேட்டு வாங்க அவசியம் இல்லை. எல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால், என் வழக்கமான சம்பளத்தில் 20 சதவீதம்தான் வாங்குகிறேன்.

‘சாஹோ’ சமீபகால தொழில்நுட்பம் சார்ந்த படமா?

படத்தில் காட்டப்படும் தொழில்நுட்பங்கள் இப்போது நிஜத்தில் இருப்பவைதான். ஆனால், கதைக்கு ஏற்ப கொஞ்சம் மிகைப்படுத்தி காட்டியுள்ளோம். பாடல் காட்சிகளில் வருவதுபோன்ற ஏரி ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. உடம்பில் ஜெட் பேக் கட்டிக்கொண்டு பறப்பது துபாயில் இருக்கிறது. இப்படி புதிதாக இருக்கும் எல்லாவற்றையும் கதைக்குள் கொண்டு வந்துள்ளோம்.

ஒரே நேரத்தில் பல மொழிகளில் நடிப்பது கடினமாக இருந்ததா?

அது மிக மிக கடினமான, சோர்வடையச் செய்யும் வேலை. ஏனென்றால் ஒரு காட்சியில் உயிரைக் கொடுத்து நடித்து முடித்ததும் இயக்குநர் ‘ஓகே’ என்பார். ‘‘அப்பாடா..’’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டு, திருப்தி அடைவதற்குள், ‘சரி சரி, அடுத்து இந்தி’ என்பார். அந்த திருப்தியே போய்விடும்.

நடிப்பை பொருத்தவரை, மொழிக்கு மொழி ஏதாவது மாற்றம் செய்திருக்கிறீர்களா?

நடிப்பு எல்லாம் ஒரே மாதிரிதான் இருந்தது. ஆனால் வசனம், அதை சொல்லும் விதத்தைப் பொருத்து அந்த காட்சியின் தன்மையில் சில மாற்றங்கள் இருக்கலாம். தமிழும், தெலுங்கும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி உணர்வை தருபவை. ஆனால் இந்தியும், தெலுங்கும் வேறு வேறு. தெலுங்கில் சில உணர்ச்சிகரமான வார்த்தைகள், வாக்கியத்தின் நடுவில் வரும். இந்தியில் ஆரம்பத்திலேயே வந்துவிடும். அதனால் உணர்ச்சி, உடல்மொழியை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கும். தமிழ், தெலுங்கில் பேசி நடிப்பதைவிட இந்தி கடினமாக இருந்தது.

இந்திய நட்சத்திரமாக மாறிவிட்டீர்கள். இப்போதாவது சகஜமாக இருக்கிறீர்களா, அல்லது, அதே கூச்ச சுபாவம்தானா?

கூச்சப்படக் கூடாது என்றுதான் நினைப்பேன். அது எனக்கும் சில நேரம் அசவுகரியமாக இருப்பதுண்டு. அது என் இயல்பிலேயே இருக்கிறது என நினைக்கிறேன்.

உங்கள் படம் வெளியாகும் நாட்களில் உங்களை திரையரங்கில் பார்க்க முடிவதில்லையே.

நண்பர்களுடன் மட்டும்தான் இருப்பேன். அவர்களோடு பேசிக் கொண்டிருப்பேன். வேறு யாரையும் சந்திக்க மாட்டேன். படம் சூப்பர் ஹிட் என்றால் மட்டும் எழுப்புங்கள் என்று கூறிவிட்டு, தூங்கிவிடுவேன். ‘பாகுபலி’க்கு முன்னால் வெளியான படம் பெரிய ஹிட் ஆனது. நண்பர்கள் என்னை எழுப்பி சொன்னார்கள். நான் தூங்கப்போவதாக அவர்களிடம் கூறியிருந்தாலும், உண்மையில் தூக்கம் வரவில்லை.

திருமணம் தொடர்பாக மீண்டும் வதந்திகள் வருகிறதே..

என்னைப் பற்றி, எனக்கே தெரியாத நிறைய சுவாரஸ்யமான திருமணச் செய்திகள் உலா வருகின்றன. எப்போது நடக்கிறதோ நடக்கட்டும். ஆனால், என் திருமணம் கண்டிப்பாக காதல் திருமணம்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x