களமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்

களமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்
Updated on
1 min read

புதிய பட அறிவிப்புகளுக்காகப் பரபரப்பாகப் பணிபுரிந்து வருகிறார் வடிவேலு. ஆனால், அவரை எதிர்க்கத் தயாராகி வருகிறது தயாரிப்பாளர் சங்கம்.

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கரிடம் கொடுத்தது. படக்குழுவினரோடு ஏற்பட்ட பிரச்சினையால், வடிவேலு நீண்ட நாட்களாக இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் அளித்தது. இதில் வடிவேலுவை வைத்து படம் பண்ண வேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்கான காரணமாக, இயக்குநர் ஷங்கருடனான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஒருகட்டத்தில் நடிக்கலாம் என்று முடிவுக்கு வந்த வடிவேலு, மீண்டும் சம்பளம் அதிகமாகக் கேட்பதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம் செலவழித்த பணத்தை, வடிவேலுவிடம் வாங்கிக் கொள்ள வேண்டும். ஷங்கர் - சிம்புதேவன் இணை வேறொரு நாயகனுடன் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தொடங்குவது எனப் பேசி முடித்துக் கொண்டனர்.

ஆனால், வடிவேலுவோ தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார். இது தொடர்பாகவும், தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது கொடுக்கப்பட்ட புகார் என்ன ஆனது என்பதை அறியவும் தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழுவில் உள்ள ஜே.சதீஷ்குமாரிடம் பேசினோம்.

"இந்த நிமிடம் வரை அந்தப் புகார் அப்படியே தான் உள்ளது. அனைத்து பிரச்சினைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்தவுடன் தான் புதுப்படம் பண்ண முடியும். எந்தப் படத்துக்காகவும், எந்தவொரு தயாரிப்பாளரின் பணத்தையும் வாங்கிக் கொண்டு எந்தவொரு நடிகர் இதுபோன்று செய்தாலும் இந்த நிலை தான்" என்று தெரிவித்தார் ஜே.சதீஷ்குமார்

மற்றொரு ஆலோசனைக் குழு உறுப்பினரான டி.சிவாவிடம் கேட்டபோது, "எதுவுமே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்தப் படத்துக்கு வடிவேலுவால் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. அதை அவர் கொடுக்க வேண்டும். அதை நாங்கள் சொல்லியிருக்கிறோம். அதனால் எந்தவொரு தயாரிப்பாளரும் அவரை வைத்துப் படம் தயாரிக்க முன்வரவில்லை. இனிமேல் முன்வரவும் மாட்டார்கள். வடிவேலு செய்திருப்பது மிகப்பெரிய தவறு" என்று ஜேஎஸ்கே தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in