

சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சித்தார்த் இணைந்து நடித்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகிறது.
'சொல்லாமலே', 'ரோஜாக்கூட்டம்', 'டிஷ்யூம்', 'பூ', '555', 'பிச்சைக்காரன்' ஆகிய படங்களை இயக்கியவர் சசி. அவரது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 2016-ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கிய 'பிச்சைக்காரன்' மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்த சசி முதன்முதலாக இரு நாயகர்களை வைத்துப் படம் இயக்கியுள்ளார். ஜிவி.பிரகாஷ் - சித்தார்த் இருவரும் இணைந்து நடித்த இப்படத்துக்கு 'சிவப்பு மஞ்சள் பச்சை' என்று தலைப்பு வைக்கப்பட்டது.
அக்கா - தம்பி உறவினை புதிய கோணத்தில் அனைத்து தரப்புக்கும் பிடிக்கும் வகையில் திரைக்கதையாக உருவாக்கி இப்படத்தை இயக்கியுள்ளார் சசி. அக்காவாக மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகை லிஜோ மோளும், தம்பியாக ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளனர்.இதில் லிஜோ மோள் கணவராக சித்தார்த் நடித்துள்ளார்.
காஷ்மீரா, மதுசூதனன், நக்கலைட் யூ-டியூப் குழுவின் நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு புதுமுக இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.
2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'சிவப்பு மஞ்சள் பச்சை' படம் வெளியீட்டுக்குத் தயாராக இருந்த நிலையில், படம் செப்டம் 6-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.