

சந்திப்பு: மகராசன் மோகன்
உதயம் என்.எச்.4, புகழ் ஆகிய படங் களைத் தொடர்ந்து சமுத்திரகனி, கருணாஸ் கூட்டணியில் ‘சங்கத் தலைவன்’ படத்தை இயக்கி முடித் திருக்கிறார் இயக்குநர் மணிமாறன். சேலம் சுற்றுவட்டாரப் பகுதியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், இரா.பாரதிநாதன் எழுதிய ‘தறியுடன்’ நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தனது படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து இயக்குநர் மணிமாறன் பேசியதில் இருந்து:
‘தறியுடன்’ நாவல் ‘சங்கத்தலைவன்’ ஆனது எப்படி?
நண்பர் வெற்றிமாறனை சந்தித்த எழுத்தாளர் பாரதி நாதன் ‘தறியுடன்’ நாவலை கொடுத்துள்ளார். அரசியல் சார்ந்த புத்தகங்களை விரும்பி படிப்பேன் என்ப தால், வெற்றிமாறன் அந்தப் புத் தகத்தை என்னிடம் கொடுத்து படிக்க சொன்னார். இரண்டே நாட் களில் படித்துவிட்டு, ‘ரொம்ப நல்லா இருக்கு, இதை படமாக்கலாம்’ என்றேன். விசைத்தறி தொழிலாளர்களைப் பற்றிய உண்மை சம்பவத்தை, அவர்களின் வாழ் வியலை மிகவும் கவனமாக எடுக்க வேண் டுமே என முதலில் எங்களுக்கு சின்ன தயக்கம் இருந்தது. ஒரு கட்டத் தில் ‘இது சரியாகத்தான் இருக்கும்’ என முடிவெடுத்து ‘சங்கத்தலைவன்’ பட வேலைகளை கையில் எடுத்தோம்.
இப்படத்தின் திரைக்கதையை சுருக்க மாக சொல்ல முடியுமா?
சேலம் சுற்றுவட்டாரப் பகுதியில் இயங்கி வரும் விசைத்தறி சங்கத்தின் தலைவர் சமுத்திரகனி. அந்தப் பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர் கருணாஸ். அவர் வேலை செய்யும் தொழிற்சாலையில் ஒரு பெண் பாதிப்புக்கு உள்ளாகிறார். அவருக்கு உண்டான நஷ்டஈட்டு தொகையை அந்த தொழிற்சாலை முதலாளி தராமல் ஏமாற்றி வருகிறார். பயம், பதற்றத்துடனே இருக்கும் கருணாஸ், ஒரு கட்டத்தில் யூனியன் தலைவர் சமுத்திரகனியிடம் முறையிடுகிறார்.
அவர் வழியே அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கிறது. இதனால் கருணாஸின் வேலையும் பறிபோகிறது. அதன்பிறகு சமுத்திரகனியோடு சேரும் அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது? சமுத்திரகனி அடுத்தடுத்து கையில் எடுக் கும் சம்பவங்கள் என்ன? இதுதான் களம். இதில் சமுத்திரகனிக்கு ஜோடியாக தொகுப்பாளினி ரம்யாவும், ‘அறம்’ படத்தில் நடித்த சுனு லட்சுமி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.
எதையும் பொதுவெளிக்கு கொண்டுவர முடியும் என்கிற இன்றைய சமூகச் சூழலில், முதலாளிகள் வழியே தொழிலாளி களுக்கு நெருக்கடி, அடிமைத்தனம், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரச் சினைகள் இருக்கத்தான் செய்கிறதா?
இப்படம் தொடர்பான கள ஆய்வுக்காக நாங்கள் சேலம், காஞ்சிபுரம் பக்கம் நெசவுத் தொழிலாளர் களை சந்தித்தபோது, தினசரி 70 ரூபாய்க்கு வேலைக்கு செல்பவர்கள் படும்பாட்டை பார்க்க முடிந் தது. வாரத்தில் 2 நாட்கள் வேலை கிடைக்குமா என ஏங்குபவர்கள் அங் கிருந்தனர். உலகம் முழுக்க இம்மாதிரி யான பிரச்சினை இருக்க செய்கிறது. இதெல்லாம் மாற வேண்டும். இவற்றை ஒரே நாளில், ஒரே ஆண்டில் மாற்றிவிடவும் முடியாது.
விசைத்தறி தொழிலாளர்கள் பின்னணி யிலான கதைக்களம் என்பதால் இதில் சோசலிஷம், கம்யூனிசம் உள்ளிட்டவை தொடர்பான பதிவுகளும் இருக்குமா?
‘சங்கத்தலைவன்’ படம் உழைக்கும் பாட்டாளி வர்க்கப் பார்வை கொண்டது. இன்றைய காலகட்டத்தில் பாட்டாளி வர்க்கப் பார்வை என்பது மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையிலான சோஷலிச, கம்யூனிச கோட்பாட்டை கொண்டதுதான். உலக அளவில் ஏற்றுக்கொண்ட தத்துவம் இது. 100 சதவீதம் அது சார்ந்த விஷயங்களைப் பற்றி பேசும் படம்.
வெற்றிமாறனைப் போன்று நீங்களும் நாவலை படமாக்கு வதில் ஆர்வம் செலுத்தி வருகிறீர்களே?
ஒரு கதையை நாமே யோசித்து, அதை எந்த மாதிரியான திசையை நோக்கி நகர்த்த வேண்டும் என யோசிப்பதைவிட, இந்த மாதிரி பாட்டாளி மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் ஒரு நாவலை படமாக்குவது சுகமான வேலை. படத்தின் பாதி வெற்றி நமக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும். இதில் தவறும் நடக்காது. எளிய மக்களின் வாழ்வியலை படமாக்கும்போது அது மக்களுக்கான படமாகவும் உருமாறுகிறது. மக்களும் தங்களது வாழ்க்கையோடு இப்படத்தை எளிதாக கனெக்ட் செய்துகொள்ள முடியும். அந்த நம்பிக்கைதான் எங்களை மக்களின் திசையை நோக்கி தொடர்ந்து பயணிக்கவும் வைக்கிறது.