

'96' படத்தில் எனது பங்களிப்பு ஒன்றுமே இல்லை என்று கொல்லுப்புடி ஸ்ரீனிவாஸ் விருது வழங்கும் விழாவில் விஜய் சேதுபதி பேசினார்.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் '96'. அக்டோபர் 2018-ல் வெளியான இந்தப் படத்தின் இயக்குநர் பிரேம் குமாருக்கு கொல்லுப்புடி ஸ்ரீனிவாஸ் விருது கிடைத்தது.
இந்த விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம், பாலா, வெற்றிமாறன், சுஹாசினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் விஜய் சேதுபதி பேசும் போது, "'96' படத்தைப் பற்றி நிறையப் பேசிவிட்டோம். பிரேம் சாருக்கு இந்த விருதைக் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. இந்தப் படத்தை தானே இயக்கலாமா என்ற சந்தேகத்தில் இருந்ததாக பிரேம் சார் இங்கு கூறினார்.
ஒரு படத்தின் கதையைக் கூறும் போது, அதை இயக்குநர் விவரிக்க வேண்டும் என விரும்புவேன். அப்போது அவர் அந்தக் கதையில் என்ன ஐடியா வைச்சிருக்கார் என்பது தெரியும். இங்கு பலரும் '96' படத்தை நான் ஏதோ சரியாக ஜட்ஜ் பண்ணியதாகப் பேசினார்கள். இந்தப் படம் பார்க்கும் போது, எப்படி பார்ப்பவர்களை அவர்களது பழைய வாழ்க்கைக்கு அழைத்துக் கொண்டு போனதோ அப்படித்தான் இயக்குநர் கதையைச் சொன்ன போது எனக்கும் இருந்தது. அவ்வளவு தெளிவாக இந்தக் கதையை விவரித்தார்.
சில படங்களை இன்னும் மெருக்கேற்றுகிறேன் என்று ஏதாவது ஒன்று பண்ணுவேன். '96' படத்தில் அப்படி எனது பங்களிப்பு ஒன்றுமே இல்லை. அதிகபட்சமாக 2-3 இடங்களில் சண்டை வந்திருக்கும். தயங்குவது தான் ராம் என்று அவர் சொல்லுவார். ஆனால், அதில் கூட ஏதாவது சிறு மாற்றத்தோடு பண்ண வேண்டும் என நான் சொல்லுவேன். ஒரே மாதிரி தயங்கினால் பார்ப்பவர்களுக்கு போரடித்துவிடும்.
ஒரு நடிகர் மூலமாகத் தான் கதை சொல்லப்படுகிறது. இது சரி, தவறு என்று சொல்லவில்லை. என் அறிவுக்கு எட்டியதால் சொல்கிறேன். ஒரு நடிகர் கதையை உள்வாங்கி அதை சரியாக வெளிப்படுத்தினால் தான் படம் சரியாக வரும் என நான் நம்புகிறேன். இயக்குநர் பிரேம் சாருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி” என்று பேசினார் விஜய் சேதுபதி.