

தேசிய விருதில் தமிழ் சினிமா புறக்கணிக்கப்பட்டு இருப்பது குறித்து இயக்குநர் பாரதிராஜா காட்டமாகப் பேசினார்.
ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஐங்கரன்'. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தை லிப்ரா நிறுவனம் வெளியிடுகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 14) காலை சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் பாரதிராஜா, வசந்தபாலன் உள்ளிட்டோர் சிறந்த விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இவ்விழாவில் பாரதிராஜா பேசும் போது, "அனைவருமே என்னை 'அப்பா... அப்பா' என அழைக்கிறார்கள். இதனால் நானும் உடைகளை எல்லாம் மாற்றிப் பார்க்கிறேன். இப்போது எந்தவொரு பெண்ணுமே என்னைக் காதலிப்பதில்லை. தரமான இயக்குநர்கள் தமிழ்த் திரையுலகில் வந்திருக்கிறார்கள். இந்தத் தலைமுறையில் தமிழ்த் திரையுலகில் தரமான படங்கள் வந்திருக்கின்றன.
தமிழ்ப் படங்களுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை என்பதற்கான அடிப்படைக் காரணம் என்ன என்பது பலருக்கும் புரியவில்லை. நான் சேர்மேனாக இருந்த போது, சண்டையிட்டுத் தான் 7 படங்களுக்குத் தேசிய விருது வாங்கினேன். இங்கிருந்து படங்களை அனுப்புபவர்களும் சரியாக இருக்க வேண்டும்.
இப்போது நாம் இருக்கும் சூழல் சரியில்லை. அதற்கு ஒரு பெரிய திறவுகோல் இருக்கிறது. அதைப் போட்டு திறக்க முயற்சிக்கலாம். முடியவில்லை என்றால் உடைக்கலாம். தமிழ் சேம்பர் என்று ஒன்றிருந்தால் தான், தமிழர் ஒருவர் இருந்துகொண்டு தமிழ்ப் படங்களை அனுப்ப முடியும். இதை நான் பல வருடங்களாகச் சொல்லிப் பார்க்கிறேன். யார் யாரோ இருந்துகொண்டு அவங்களுக்கு வேண்டிய படங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
கேரளாவுக்கு 12 விருது, ஆந்திராவுக்கு 11 விருது, கர்நாடகாவுக்கு 9 விருது ஆனால் தமிழகத்துக்கு கேவலம் 1 விருது தான். அதுவும் அந்தப் படத்தின் பெயர் கூட சரியாகத் தெரியவில்லை. எவ்வளவு தரமான படங்கள் வந்திருக்கின்றன. 'பரியேறும் பெருமாள்', 'வடசென்னை' என பல படங்களுக்கு விருது இல்லை. எங்களுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும். அதற்கு திறவுகோல் இருக்கிறது. நேரம் வரும் போது அழைக்கிறேன். அனைவரும் ஆயுதங்களோடு வாருங்கள்.
தற்போது தமிழ் சினிமாவில் நல்ல தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். விநியோகஸ்தர்கள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இங்கு லிப்ரா சந்திரசேகரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய முழுக்கதையையும் கேட்டேன், கஷ்டமாக இருந்தது. நிறைய ரசனையுடன் நல்ல மனிதர்கள் வருகிறார்கள். அவர்கள் சூறையாடி விடாதீர்கள்" என்று பேசினார் இயக்குநர் பாரதிராஜா.