Published : 14 Aug 2019 02:29 PM
Last Updated : 14 Aug 2019 02:29 PM

‘மாநாடு’ படத்துக்குப் போட்டியாக ‘மகாமாநாடு’: சிம்பு அறிவிப்பு

‘மாநாடு’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட சிம்பு, அதற்குப் போட்டியாக ‘மகாமாநாடு’ என்ற படத்தை அறிவித்துள்ளார்.

சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ என்ற படம் தயாராவதாகக் கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. வெங்கட்பிரபு இயக்கவிருந்த இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தமானார். வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிப்பதாக இருந்தது.

இந்தப் படத்துக்காக வெளிநாட்டில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து உடல் எடையைக் குறைத்த சிம்பு, தற்காப்புக் கலைகளையும் பயின்றார். அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட இருந்த இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்தபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. எனவே, படம் ட்ராப் என செய்திகள் வெளியாகின. அவசரமாக அதை மறுத்த படக்குழு, விரைவில் தொடங்கும் எனக் கூறியது.

ஆனால், சொன்னபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. எனவே, படம் ட்ராப் என செய்திகள் வெளியாகும் ஒவ்வொரு முறையும் படக்குழு மறுத்து வந்தது. ஒருகட்டத்தில் படம் ட்ராப் என்ற தகவலை படக்குழுவே அதிகாரபூர்வமாக அறிவித்தது. சிம்புவுக்குப் பதிலாக வேறொரு நடிகரை வைத்து படப்பிடிப்பு தொடங்கப்படும் என சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தது படக்குழு.

இந்நிலையில், ‘மாநாடு’ படத்துக்குப் போட்டியாக ‘மகாமாநாடு’ என்ற படத்தை அறிவித்துள்ளார் சிம்பு. இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு மட்டுமின்றி, படத்தை இயக்கி, தயாரிக்கவும் உள்ளார் சிம்பு. தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதற்கிடையில், ‘முஃப்தி’ கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் சிம்பு. அவருடன் சேர்ந்து கெளதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x