

பிகில் படக்குழுவினர் 400 பேருக்கு தங்க மோதிரத்தைப் பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் விஜய்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாக வரவுள்ளது.
நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நேற்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவு பெற்றுள்ளது.
இதனையடுத்து, படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என 400 பேருக்கு பிகில் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தங்க மோதிரத்தை விஜய் பரிசாக வழங்கியுள்ளார்.
இதனை படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் கல்பாத்தி அர்ச்சனாவும் உறுதி செய்துள்ளார். தனது ட்விட்டரில் இதனைப் பதிவிட்ட அவர், படப்பிடிப்பு 95% நிறைவடைந்துவிட்டதாகவும் இன்னும் டப்பிங் பணிகள் மட்டுமே மிச்சம் என்றும் கூறியிருக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனைகளாக நடித்த பெண்களுக்கு விஜய், அட்லீ கையெழுத்திட்ட கால்பந்தும் பரிசாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் #BigilRing என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.