

சடங்கு, சம்பிரதாயங்களை விமர்சித்தே பல நாடகங்களை மேடையேற்றியவர் குடந்தை மாலி. அவரது ‘மாலிஸ் ஸ்டேஜ்’ குழு பழுத்த நாடக அனுபவத் துடன் ‘இதோ எந்தன் தெய்வம்’ நாடகத்தில் கடவுள் நம்பிக்கையை கையில் எடுத்திருக்கிறது. சமீபத் தில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட் ஸில் இந்த நாடகம் அரங்கேறியது.
சிறுமி ஸ்ருதியின் தந்தை வெளி நாட்டில் இருக்கிறார். அம்மா, தாத்தாவின் அரவணைப்பில் கல்வி, கடவுள் பக்தி, கலைகளில் மிகுந்த ஆர்வத்தோடு வளர்கிறாள் ஸ்ருதி. பள்ளி விழாவில் நடனம் ஆடும் ஸ்ருதி திடீரென மேடையில் மயங்கி விழுகிறாள். அவளுக்கு உடனடியாக மிகவும் நுட்பமான இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அவ்வாறு நுட்பத் துடன் அறுவை சிகிச்சை செய்யக் கூடிய டெல்லியை சேர்ந்த மருத்துவ நிபுணர் அசோக், ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருப்பது தெரிய வருகிறது. ஸ்ருதி குடும்பத்தினர், தங்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக அவரை அணுகுகின்றனர்.
மத நம்பிக்கைகள், கடவுள் நம்பிக்கைகளை மருத்துவத்தி லும், சிகிச்சையிலும் கலப்பதை கண்டிப்பவரான அசோக், மருத்துவர் பணியை நேர்மையாக செய்யக்கூடியவர்.
குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய நாளும் குறிக்கப்படுகிறது. இந்த சமயத்தில், டெல்லியில் இருக்கும் டாக்டர் அசோக்கின் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக முக்கிய பிரமுகர் ஒருவர் அனுமதிக்கப்படு கிறார். அவருக்கு அசோக்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண் டும் என்று முக்கியப் புள்ளிகள் சிலர் நெருக்கடி கொடுக்கின்றனர்.
நடுத்தர குடும்பத்தின் புத்தி சாலி சிறுமியா, அரசியல் செல் வாக்கு உள்ள பிரமுகரா? அசோக் யாருக்கு அறுவை சிகிச்சை செய்கி றார், யாரை காப்பாற்றுகிறார் என் பதை பரபரப்பான காட்சிகளால் நகர்த்திச் சென்று, ரசிகர்களை நிலைகொள்ளாமல் தவிக்க வைக் கிறார் நாடகத்தை எழுதி, இயக்கி யுள்ள மாலி.
டாக்டர் அசோக்காக நடிக்கும் கணேஷும், ஸ்ருதியாக நடிக்கும் சிறுமி வர்ஷாவும்தான் ஒட்டு மொத்த நாடகத்தையும் தாங்குகின் றனர். சிறுமி வர்ஷாவுக்கு நடிப்பில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. சண்டீகர் ரமணி, சவும்யா ராம் நாராயண், நரசிம்ம பாரதி, உமா சங்கர், சிவகுமார் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
பெரம்பூர் குமாரின் ஒப்பனை, கிச்சாவின் ஒளி, ஒலி அமைப்பு, பத்மா ஸ்டேஜ் கண்ணனின் அரங்க அமைப்பு ஆகியவற்றால் நாடகம் மிளிர்கிறது.
வித்தியாசமான இறுதிக் காட்சியைப் பார்க்கும் ரசிகர்களின் கண்களில் நெகிழ்ச்சியும், அன்பும் கரைபுரண்டு ஓடுகிறது.
குறைவான பாத்திரங்கள். எளிமையான காட்சிகள். ஆனால் கனமான கதையம்சம். இதுதான் மாலியின் வெற்றி ஃபார்முலா. அது இந்த நாடகத்திலும் நிரூபண மாகி இருக்கிறது. இந்த நாடகம் வரும் 16-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு பாரத் கலாச்சார், ஒய்ஜிபி அரங்கத்தில் அரங்கேறுகிறது.
குடந்தை மாலி நேற்று கலைமாமணி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.