Published : 13 Aug 2019 04:03 PM
Last Updated : 13 Aug 2019 04:03 PM

'கோமாளி' படத்தை நிறுத்த அழுத்தம்; தயாரிப்பாளர்களை மிரட்டுவதா?- ஞானவேல்ராஜா கண்டனம்

'கோமாளி' படத்தை நிறுத்த திருச்சி விநியோகஸ்தர்கள் என்ற பெயரில் சிலர் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், அவர்களின் பிடியிலிருந்து தயாரிப்பாளர்களை மீட்க வேண்டும் என்றும் ஸ்டுடியொ க்ரீன் நிறுவனத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.

ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'Mr.லோக்கல்'. இந்தப் படம் படுதோல்வியைத் தழுவியது. இதில் முதலீடு செய்த பலருக்கும் நஷ்டம் ஏற்பட்டது. குறிப்பாக சில விநியோகஸ்தர்கள் மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை வாங்கினார்கள். (மினிமம் கியாரண்டி முறை என்றால், ஒட்டுமொத்தமாக ஒரு தொகையைக் கொடுத்துவிட வேண்டும். நஷ்டம் வந்தால் தயாரிப்பாளரிடம் கேட்கக் கூடாது. லாபம் வந்தால் தயாரிப்பாளரும் கேட்கக் கூடாது)

எம்.ஜி. (மினிமம் கியாரண்டி) முறையில் 'Mr.லோக்கல்' படத்தை வாங்கிய திருச்சி விநியோகஸ்தருக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனை தனக்கு சரி செய்து தர வேண்டும் என்று 'கோமாளி' படத்துக்கு திருச்சி ஏரியாவில் தடை விதித்திருக்கிறார்கள். ஏனென்றால் 'Mr.லோக்கல்' படத்தை தமிழகம் முழுக்க விநியோகம் செய்த சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தான், 'கோமாளி' படத்தை வெளியிடுகிறது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் சங்கத்தில் போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜேஎஸ்கே, நான் உட்பட இதில் சிக்கித் தவிக்கும் பிற தயாரிப்பாளர்களையும் இதிலிருந்து மீட்க வேண்டும் என்று ஞானவேல்ராஜா கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருச்சி விநியோகஸ்தர்கள் என்ற பெயரில் சில நபர்கள் திரைப்படத் தயாரிப்பாளர்களை மிரட்டும் போக்கு பற்றிய விவகாரமாகும் இது.

பணத்துக்காக தனிப்பட்ட முறையில் பல தயாரிப்பாளர்கள் இந்த மிரட்டல் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மிரட்டல் விடுத்துக் கொண்டேதான் இருக்கின்றனர். இந்த முறை என்னை மிரட்டியுள்ளனர். நான் ஸ்டூடியோ கிரீன் என்ற நிறுவனத்தின் தயாரிப்பாளராக தமிழ்நாடு திரையரங்க உரிமைகளை தன்வீ பிலிம்ஸுக்கு முழுவதும் விற்று விட்டேன். அவர்கள் திரையரங்க உரிமைகளுக்கான பிற ஏரியா உரிமைகளை ராயல்டி அடிப்படையில் ஜீடி என்பவருக்கு விற்றுள்ளனர். ஜீடி என்பவர் திரையரங்குகளிடமிருந்து அட்வான்ஸ் பெற்றுள்ளார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக திரைப்படம் எதிர்பார்த்த வசூலைப் பெற்றுத் தரவில்லை. எனக்குமே இது பெரிய கஷ்டங்களைக் கொடுத்தது என்பதே உண்மை. இந்நிலையில் ஜீடி-யுடன் ( ரவி, மீனாட்சி சுந்தரம்) மற்றும் பலரும் என் அலுவலகத்திற்கு வந்து திருச்சி விநியோகஸ்தர்கள் எனக்கு ரெட் கார்டு போட்டிருப்பதாகவும் ரூ.1.6 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் இல்லையெனில் நான் வர்த்தகம் செய்ய முடியாது எனவும் தெரிவித்தனர்.

நான் அதிர்ச்சியடைந்தேன். இது மிகவும் வெளிப்படையான மிரட்டல் மற்றும் பிளாக்மெயில் ஆகும். ஆகவேதான் நான் என் புகாருடன் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினேன். சில தனி நபர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு பணத்துக்காக மிரட்டும் செயல் இது. இந்த நடைமுறையில் ஈடுபட்டோருடன் எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை.

திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சிலில் ஜேஎஸ்கே, சிவா, பாரதிராஜா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அவர்களும் மிரட்டல் குறித்து அதிர்ச்சியடைந்து இதில் ஈடுபட்டவர்களைத் தொடர்பு கொண்டனர். ஆனால் இவர்களுக்கும் அதே மிரட்டல்தான் பதிலாகக் கிடைத்தது. ஜேஎஸ்கே, அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் 'கோமாளி' படத்தை நிறுத்தவும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதில் தயாரிப்பாளருக்கு எந்தப் பங்கும் இல்லை. அப்பாவி தயாரிப்பாளர் மிரட்டப்படுகிறார். நான் மட்டுமல்ல, நிறைய தயாரிப்பாளர்கள் இதே தனி நபர்களால் தொடர்ந்து மிரட்டப்பட்டும் தொல்லைக்கும் ஆளாகியுள்ளதாக புகார் அளித்துள்ளனர். ஆகவே ஜேஎஸ்கே, நான் உட்பட இவர்களிடம் சிக்கித் தவிக்கும் பிற தயாரிப்பாளர்களையும் இதிலிருந்து மீட்க வேண்டும்'' என்று ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x