Published : 13 Aug 2019 11:02 AM
Last Updated : 13 Aug 2019 11:02 AM

''சிவாஜிக்கு நடிக்கத் தெரியாது’’ - ’வசந்தமாளிகை’ விழாவில் சித்ரா லட்சுமணன் பேச்சு

வி.ராம்ஜி
’’சிவாஜிக்கு கேமிராவுக்கு முன்பு நடிக்கத் தெரியும். ஆனால் வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது. அவர் ஒருபோதும் நடித்ததில்லை’’ என்று நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் பேசினார்.


‘வசந்தமாளிகை’ திரைப்படம், சமீபத்தில் டிஜிட்டலில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதையொட்டி, சிவாஜிக்கு பிரமாண்டாமான கட் அவுட்டுகள் வைக்கப்பட்டன. அந்த கட் அவுட்டையே மறைக்கும் அளவுக்கு மாலையணிவித்து மகிழ்ந்தார்கள் ரசிகர்கள்.


இந்தப் படம் திரையிட்டு 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், 50வது நாள் விழாவைக் கொண்டாடினார்கள்.
சென்னை ஆல்பட் தியேட்டரில் நடந்த விழாவில், சிவாஜியின் மகன் ராம்குமார், இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.சி.குகநாதன் முதலானோர் கலந்துகொண்டனர்.

நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் விழாவில் கலந்துகொண்டு பேசியதாவது:
சிவாஜிகணேசன் முதன்முதலில் நடிக்க வந்தது 1952ம் வருடம். கிட்டத்தட்ட 67 வருடங்கள் கழித்தும், அவருடைய படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறதென்றால், அது சிவாஜி அவர்களுக்கு மட்டும்தான். உலகில் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத பாக்கியம் அது.


சிவாஜி ஒரு ஸ்டைலீஷான நடிகர். இந்த ‘வசந்த மாளிகை’ திரைப்படமே ஸ்டைலீஷாக எடுக்கப்பட்ட படம்தான். படம் முழுக்க, ஒவ்வொரு விதமான கோட்சூட்டுடன் அட்டகாசமாக வருவார் சிவாஜி. இந்த கோட்சூட்டெல்லாம் வேறு எந்த நடிகருக்கும் இப்படி பொருத்தமாக இருக்காது. அதனால்தான் ‘வசந்தமாளிகை’யை இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.


எத்தனையோ பேரை தயாரிப்பாளராக்கி உயர்த்திவிட்டவர் சிவாஜி. ஏ.பீம்சிங் எனும் இயக்குநரை தயாரிப்பாளராக்கியது சிவாஜிதான். இயக்குநர் பி.ஆர்.பந்துலுவை தயாரிப்பாளராக்கினார் சிவாஜி. இயக்குநர் ஸ்ரீதர் எத்தனையோ வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அவர் ஒரு கதையை சிவாஜியிடம் சொல்ல, சிவாஜிக்கு அந்தக் கதை பிடித்துவிட்டது. ஆனால் ஸ்ரீதரிடம் பணமில்லை. ‘இந்தப் படத்தில் நடிக்க உங்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கக் கூட பணமில்லை’ என்றார் ஸ்ரீதர். ‘அட்வான்ஸ் கேட்டேனா நான்? முதல்ல, என்னை வைச்சு படம் எடுக்கப் போறதா விளம்பரம் பண்ணு. பணம் வந்துரும். படம் எடு. சம்பளத்தை அப்புறம் பாத்துக்கலாம்’ என்று ஊக்கப்படுத்தி அனுப்பிவைத்தார் சிவாஜி.

சிவாஜி ஒரு படத்தில் நடிக்கிறாரென்றால், அந்தப் படத்தை தன் தோளில் சுமந்து வெற்றிக்குப் பாடுபடுவார். கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்னார்... ‘பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டால், அங்கே கலை காணாமல் போய்விடும்’ என்றார்.

சிவாஜி கடைசி வரை பணத்தைப் பற்றி நினைக்கவே இல்லை. அவரை வைத்து ‘வாழ்க்கை’ என்ற படத்தைத் தயாரித்தேன். ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் செய்யவேண்டும். இரண்டுநாள்தான் இருக்கிறது.சிவாஜிக்கு பாதிப் பணம்தான் கொடுத்திருந்தேன். அவருக்கு போன் செய்து, ‘மீதிப்பணம் தரவேண்டும். எங்கு வரவேண்டும்’ என்று கேட்டேன். ‘படம் ரிலீஸ் பண்றதுக்கு ரெண்டு நாள்தான் இருக்கு. நேரா தஞ்சாவூர் வந்துரு. பஞ்சு அருணாசலத்தையும் வரச்சொல்லிருக்கேன். அவரோடயே வந்துரு. அங்கே, தஞ்சாவூர்ல கமலா, சாந்தின்னு தியேட்டர் ஓபனிங் இருக்கு. சம்பளப் பணத்தை அப்புறம் பாத்துக்கலாம்’என்றார் சிவாஜி. நான் நெகிழ்ந்து போய்விட்டேன். அதுதான் சிவாஜி.

சிவாஜிக்கு கேமிராவுக்கு முன்பு நடிக்கத் தெரியும். கேமிராவுக்கு வெளியே, வாழ்க்கையில் அவருக்கு நடிக்கத் தெரியாது.

இவ்வாறு சித்ரா லட்சுமணன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x