

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு 'நம்ம வீட்டுப் பிள்ளை' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு
'Mr.லோக்கல்' படத்துக்குப் பிறகு மித்ரன் இயக்கத்தில் உருவாகும் 'ஹீரோ' மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் 'ஹீரோ' படத்தின் சில காட்சிகளை முடித்துவிட்டு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான படத்துக்கு அதிக தேதிகள் ஒதுக்கினார்.
எப்போதுமே பாண்டிராஜ் படங்கள் என்றாலே, திட்டமிட்டு சரியாக முடிக்கக் கூடியவர். அதன்படியே, ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். இன்னும் 2 பாடல்கள் காட்சிப்படுத்த வேண்டியது மட்டுமே உள்ளது.
தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'நம்ம வீட்டுப் பிள்ளை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் செப்டம்பரில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி பூஜை விடுமுறைக்கு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி, ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், சூரி உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, மித்ரன் இயக்கத்தில் உருவாகும் 'ஹீரோ' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன். டிசம்பர் 20-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. குறுகிய கால இடைவெளியில் சிவகார்த்திகேயனின் 2 படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.