

ஜீ தமிழ் சேனலில் இன்றுமுதல் மதியம் 2 மணிக்கு ‘இரட்டை ரோஜா’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது.
மின் கம்பம் ஏறும் தொழிலாளர் கந்தசாமிக்கு ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் அனு - அபி. இரண்டு நிமிட இடைவெளியில் அக்கா ஆகிவிட்ட அனுவுக்கு, சிறு வயதில் இருந்தே தங்கை அபி மீது தீராத வெறுப்பு. ஆனால், எதுவாக இருந்தாலும் அக்காவுக்காக விட்டுக்கொடுக்கும் பாசமான தங்கை அபி. இருவரும் வளர வளர, இந்த வெறுப்பு - பாசமும் அதிகமாகிறது.
தான் மகாராணியாக வாழவேண்டும்; தனக்கு கால் பிடிக்கும் சேவகியாக அபி இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள் அனு. அதனால், ஒரு பணக்கார பையன் உடனான அபியின் காதலுக்கு இடையூறாக இருக்கிறாள்.
அவர்கள் இருவரது திருமண வாழ்க்கை எப்படி அமைகின்றன? அபியை நடுத்தெருவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அனுவின் ஆணவம் ஜெயித்ததா? தனக்கு எது வந்தாலும் அக்கா அனு நன்றாக இருக்க வேண்டும் என்ற அபியின் பாசம் ஜெயித்ததா? இதுவே ‘இரட்டை ரோஜா’வின் கதைச் சுருக்கம்.
இதில் அக்கா, தங்கை என 2 கதாபாத்திரங்களில் நடிக்கிறார் ஷிவானி. சபிதா ஆனந்த், ‘பூவிலங்கு’ மோகன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
ஆர்ஏஎஸ் நாராயணன் தயாரிக்க, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘பூவே பூச்சூடவா’ தொடரின் இயக்குநர் மணிகண்ட குமார் இயக்குகிறார். சரவணன் வசனம் எழுதுகிறார்.