

வி.ராம்ஜி
‘’எனக்கும் டான்ஸ் மூவ்மெண்ட் கஷ்டமாத்தான் இருக்குன்னு ரஜினி சார் சொன்னாரு’’ என்று நடிகை அம்பிகா தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
நடிகை அம்பிகா, தனியார் இணையதளச் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
ரஜினி சாருடன் நடிக்கும் போது அவருடைய உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொள்ளும். எனக்குத் தெரிந்து, ரஜினி சார் நெகட்டீவாகவே எதையுமே நினைக்கமாட்டார். அதேபோல, யாரையும் தவறாகப் பேசவும் மாட்டார்.
படப்பிடிப்புத் தளத்தில், யாராவது கொஞ்சம் டல்லாக இருந்தால் கூட, அவர்களை அழைத்து, அவர்களை உற்சாகப்படுத்தி, அந்த ஏரியாவையே கலகலக்கவைத்துவிடுகிற குணம் அவருக்கு உண்டு.
ரஜினி நடித்துவிட்டு, அவர்பாட்டுக்கு உம்மென்று போய் உட்கார்ந்துவிடுவார் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ரஜினி அப்படியில்லை. அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் கலகலப்புக்குப் பஞ்சமே இருக்காது. ‘படிக்காதவன்’ படத்தின் காமெடிக் காட்சிகள் எல்லாமே மொத்த யூனிட்டில் இருந்தவர்கள், விழுந்து விழுந்து சிரிக்கும்படியாகத்தான் இருந்தது.
‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில், ‘பொன்மானே’ பாட்டு. நான் கிரேனில் உயரத்தில் அப்படியே ஒரு சுற்று சுற்றிவரவேண்டும். எனக்கு உயரமென்றால் பயம். இதை ரஜினியின் காதில் கிசுகிசுத்தேன். ‘அவ்ளோதானே. விடு நான் பாத்துக்கறேன்’ என்றார். எஸ்.ஏ.சந்திரசேகரன் சாரிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை. கடைசியில், ரஜினி சார்தான் கிரேன் ஷாட்டில் நடித்தார்.
அதேபோல, ‘படிக்காதவன்’ படத்தின் ‘ஜோடிக்கிளியெங்கே பக்கத்துலே’ என்ற பாடலாகட்டும், மற்ற பல பாடல்களாகட்டும். எனக்கு டான்ஸ் ஸ்டெப்ஸ் கஷ்டமாக இருக்கும். நேராக ரஜினி சாரிடம் சென்று, அவர் காதில் மட்டும் விழும்படியாக, ‘சார், இந்த ஸ்டெப் ரொம்பக் கஷ்டமா இருக்கு சார்’ என்று சொன்னேன். உடனே அவர், ‘எனக்கும்தான் இந்த டான்ஸ் மூவ்மெண்ட் கஷ்டமா இருக்கு’ என்று சொல்லுவார். பிறகு டான்ஸ் மாஸ்டரிடம் சென்று, ‘கொஞ்சம் ஸ்டெப்ஸை ஈஸி பண்ணுங்களேன்’ என்பார். அதுதான் ரஜினி சார்.
‘நீயும் நானும் சேர்ந்து நடிச்ச படங்கள்ல, ‘நான் சிகப்பு மனிதன்’ படத்துல வர்ற ‘பொன்மானே சங்கீதம்’ பாட்டுதான் ரொம்பப் பிடிக்கும்’னு ரஜினி சார் சொன்னார். அதேபோல எனக்கு ‘படிக்காதவன்’ படத்துல வர்ற ‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்’ பாட்டு ரொம்பவே பிடிக்கும். அதுல ரஜினி சாரோட ஸ்டைல் ரொம்ப பிரமாதமா இருக்கும். எண்பதுகள்ல, ரஜினி சாரோட ஸ்டைல், கிளாமர், லவ்னு எல்லாமே செம கலக்கலா இருக்கும்.
’அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘மாவீரன்’ படம் ரெண்டுபடத்துலயும் என் கேரக்டர் டோட்டலா வேற மாதிரி இருக்கும். எனக்கும் ரொம்பவே பிடிக்கும்.
இவ்வாறு அம்பிகா தெரிவித்தார்.