

மகராசன் மோகன்
பொதுவாக ஒரு கலைஞனின் ஓய்வு நாட்கள் அல்லது அவருக்கு பிந்தைய காலகட்டத்தில்தான் அவரது சாதனைகள், பயணங்கள், விருதுகள் பற்றி பெருமையோடு அசைபோடுவது வழக்கம். திரைப் பயணத்தில் சுறுசுறுப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கும்போதே ஒருவரை பெருமிதத்தோடு நினைவுகூரும் வாய்ப்பு கிடைப்பது அபூர்வம். கமல்ஹாசன் மூலமாக அந்த வாய்ப்பு தமிழ் ரசிகர்களுக்கு வாய்த்திருக்கிறது. எந்த ஒரு வரம்புக்குள்ளும் சிக்காமல், எந்த எல்லைக்குள்ளும் குறுகிவிடாமல், தன் பாதையில் இருந்து சற்றும் விலகாமல், தன் பாணியை சற்றும் மாற்றாமல் தொடர்ந்து பயணித்து வருபவர் கமல்ஹாசன்.
ஏவி.எம் தயாரிப்பில் பீம்சிங் இயக்கிய ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கமல். அந்த படம் வெளிவந்தது 1960 ஆகஸ்ட் 12-ம் தேதி. நாளையோடு 60 ஆண்டுகள் ஆகின்றன. கமல் தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், அவரது திரையுலக வருகையின் வைர விழாவைக் கொண் டாடத் தயாராகிவிட்டனர் ரசிகர்கள்.
எம்ஜிஆரின் புகழாரம்
நடிப்பு, நடனம், இயக் கம், திரைக்கதை, தயா ரிப்பு என சினிமாவில் பல பரிணாமங்களிலும் பங்க ளிப்பை வழங்கியவர், வழங்கி வருபவர் கமல்.1981-ல் சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் தயாரித்து, நடித்த ‘ராஜ பார்வை’ படம் வெளிவந்தது. ஒரு நடிகராக கமலுக்கு 100-வது படம், தயாரிப்பாளராக முதல் படம். அப்படத்தின் வெற்றி விழாவுக்கு அப்போதைய முதல்வர் எம்ஜிஆரை அழைத்திருந்தார் கமல். விழாவில் எம்ஜிஆர் கூறியது:
‘என்னப்பா கமல்! சினிமாவுல பெருசா வாய்ப்பு இல்லாம இருக்கியே. முன்னேறணும்னு ஐடியா இல்லையா’ என்று சில வருஷங்களுக்கு முன்பு கேட்டேன். ‘ரொம்ப ஒல்லியா இருக்கேன். எதுக்கும் செட் ஆகல என்று நினைக் கிறாங்களோ, என்னவோ?’ என்று கமல் சிரித்துக்கொண்டே சொன்னார். ‘பேசாம என்கிட்ட வந்துடு. 6 மாசத்துல உன்னை மாத்திக்காட்டுறேன்’ என்றேன். கொஞ்ச காலத்துக்கு அப்புறம், ‘இங்கே தமிழ்நாட்டுல இருந்து போன பையன் ஒருவன் கேரளாவுல நல்ல ஃபிட்னெஸ், நல்ல நடனம்னு அசத்துறான்’ என்று செய்தி வந்தது. விசாரித்தபோதுதான் தெரிந்தது அது நம்ம கமல் என்று. தன்கிட்ட மைனஸே இருந்தாலும் சரிசெய்து ஜெயித்துக் காட்டும் வல்லமை கமலுக்கு உண்டு!
விழாவில் எம்ஜிஆர் இப்படி பேசியதும், கரவொலி விண்ணைப் பிளந்தது.
‘கத்துக்கிட்டு வந்து ஜெயிப்பான்’
‘கமலுக்கு அரசியலில் நுழைய விருப்பம்’ என்று ஒருமுறை செய்தி வெளியானபோது, பல விமர்சனங்கள் எழுந்தன. அதில் அரசியல்வாதிகளின் விமர்சனங்கள் அதிகம். அப்போது இயக்குநர் பாரதிராஜா, ‘‘கமலை தேவையில்லாம சீண்டாதீங்க. அவன் ஒரு விஷயத்துல இறங்கணும்னு முடிவெடுத்துட்டா, அது தனக்கு தெரியாததாக இருந்தாலும் கத்துக்கிட்டு வந்து ஜெயிச்சுடுவான்’’ என்றார்.
வெற்றி, தோல்விகளைக் கடந்து சினிமாவில் கமல்ஹாசனின் பல முயற்சிகள் இப்படி நடந்தவையே.
இவன்தான் செல்வம்!
1960-களில் மும்பையை சேர்ந்த டெய்சி ராணி என்ற குழந்தை நட்சத்திரம்தான் பல தமிழ் படங்களில் சிறுவர், சிறுமி கதாபாத்திரங் களை ஆக்கிரமித்தவர். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்திலும் குழந்தை நட்சத்திர கதாபாத்திரத்துக்காக முதலில் அவரது பெயரே பட்டியலில் இருந்தது. இந்த சூழலில், எதேச்சையாக டவுசர், சட்டையோடு தனது ஸ்டுடியோ பங்களாவுக்கு வந்த 5 வயது சிறுவன் கமலை முதன்முறையாக பார்த்த ஏவி.மெய்யப்ப செட்டியார், ‘‘இதோ, இந்த பையன்தான் களத்தூர் கண்ணம்மா செல்வம்!’’ என்றார் உற்சாகத்தோடு.
அந்த படத்தின் அனுபவம் குறித்து இயக்குநர் எஸ்பி.முத்துராமன் கூறியதாவது:
‘‘ஏவி.எம் ஸ்டுடியோவில் எடிட்டிங் துறை யில் பணியாற்றிவந்த நான் முதன்முதலாக ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில்தான் உதவி இயக்குநராக உள்ளே வருகிறேன். படப்பிடிப்புக்கு நடுவே பெரும்பாலும் என் மடியில்தான் கமல் அமர்ந்திருப்பார். படத்தின் சில காட்சிகளில் கமலுடன் பல சிறுவர்கள் நடித் திருப்பார்கள். இடை வேளைகளில் எல்லா பசங்களும் விளையாடப் போய்டுவாங்க. கமலை மட்டும் காணோமே என்று தேடினால், ஏவி.எம் ஸ்டுடியோவில் ப்ரிவியூ தியேட்டரில் படம் பார்த்துட்டு இருப்பார். அந்த படத்தில் எப்படி நடிக்கிறாங்களோ, அதேமாதிரி நடித்தும் காட்டுவார். இந்த பையன் பெரிய ஆளா வருவான்னு அன்னைக்கே எனக்கு தெரியும்.
கமலை வைத்து ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’, ‘சகலகலா வல்லவன்’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என 10-க்கும் மேற்பட்ட படங்களை நான் இயக்கியது மகிழ்ச்சி.
நடிப்பதோடு மட்டுமல்லாமல் உலகப் படங்கள், திரைப்பட விழாக்கள், புதிய சினிமா தொழில்நுட்ப கருவிகள் குறித்து அந்த நாட்களிலேயே நிறைய பேசுவார். எங்களுக்கும் அறிமுகம் செய்வார். ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படப்பிடிப்புக்காக எல்லோரும் ஜப்பான் போயிருந்தோம். நேரம் கிடைச்சப்போ, அங்கே ஷாப்பிங் போய்ட்டு வந்தோம். எல்லோரும் வீட்டுக்கு தேவையான சாமான், பரிசுப் பொருட்கள் அப்படி இப்படின்னு வாங்கிட்டு வந்தப்போ, கமல் மட்டும் சினிமாக்கு தேவையான லென்ஸ், கேமரான்னு வாங் கிட்டு வந்தாரு. சினிமாங்கிறது அவருக்கு சுவாசம் மாதிரி.
‘‘ரசிகர்கள் விரும்புறாங்க என்பதற்காக நாம படம் எடுக்கக் கூடாது. நல்ல கதைகளை நாம கிரியேட் செய்து, அதை தரமான திரைப்படமாக எடுத்து, அவர்களை பார்ப்பதற்கு பழக்க வேண்டும்!’’ - ஆரம்பத்தில் இருந்தே கமல்சொல்லும் சினிமா ஃபார்முலா இது. இன்று வரை சினிமாவில் இந்த பாணியில் இருந்து கமல் விலகவே இல்லை. இந்த 60 ஆண்டுகளாக அவரோடு நாங்களும், எங்களோடு அவரும் பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சி.
இவ்வாறு எஸ்பி.முத்துராமன் கூறினார்.
தனது சினிமா வருகையின் வைர விழா கொண்டாட்டம் தரும் உற்சாகத்தோடு, நாளை ‘இந்தியன் 2’ திரைப்பட படப்பிடிப்புக்காக புறப் பட்டுக் கொண்டிருக்கி றார் கமல்ஹாசன்.