

சிம்புவின் மனதுக்கும் குணத்துக்கும் ஏற்ற பெண்ணைத் தேர்ந்தெடுக்க அத்திவரதரால் மட்டுமே முடியும் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
அத்திவரதரைத் தரிசனம் செய்வதற்காக நேற்று (ஆகஸ்ட் 9) காஞ்சிபுரம் வந்தார் டி.ராஜேந்தர்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“40 ஆண்டு காலம் ஜலத்துக்குள் இருந்தார் அத்திவரதர். அவர் ஜலத்தோடு இருக்கக்கூடியவர் அல்ல, பலத்தோடு இருக்கக் கூடியவர். ‘உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?’ என என்னிடம் ஒருவர் கேட்டார். நான் திராவிடர் கழகத்தில் இருந்தவன் இல்லை. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று பேரறிஞர் அண்ணா சொன்ன கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்த திமுகவில் இருந்தவன். எல்லாமே இறைவன்தான். அதனால்தான் நான் இன்று தரிசனம் செய்ய வந்தேன்.
என்னுடைய மகன் சிலம்பரசன் வெளிநாட்டில் இருந்தாலும், ‘காஞ்சிபுரம் போய் அத்திவரதரைத் தரிசனம் பண்ணீங்களா அப்பா?’ என்று கேட்டான். என்னுடைய மகனுக்குத் திருமணம் நடக்க வேண்டுமென்றால், பெருமாளிடம்தான் கேட்க முடியும். குறையை யாரிடம் சொல்ல முடியும்? பெருமாளிடம்தான் சொல்ல முடியும். நானும் சொன்னேன்.
சாதாரண ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், எப்படி வேண்டுமானாலும் நான் தேர்ந்தெடுத்து விடலாம். ஆனால், அப்படி நான் தேர்ந்தெடுத்துவிட முடியாது. என் மகனுக்குப் பிடித்த, அவன் மனதுக்கு ஏற்ற, அவனுடைய குணத்துக்கு ஏற்ற ஒரு மணமகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னால், அது அத்திவரதரால் மட்டுமே முடியும்.”
இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்தார்.